Subscribe Us

header ads

மித்திரன் வார மலர் நேர்காணல்- ஹட்டன் பிரவீனா

மித்திரன்- 12/04/2020

மலையக இளம் பெண் எழுத்து ஆளுமை ஹட்டன் பிரவீனா மித்திரன் வாரமலர் நேர்காணலுக்காக....



1)வணக்கம் பிரவீனா உங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தோடு நேர்காணலை ஆரம்பிக்கலாம்.

வணக்கம். எனது பெயர் பிரவீனா. தந்தையின் பெயர் கணேஷன். தாயின் பெயர் அம்பிகா. எனது ஊர் ஹட்டன். நான் எனது ஆரம்பக்கல்வி மற்றும் உயர் கல்வியை ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரியில் நிறைவுசெய்தேன். 2017ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில்  கலைப்பிரிவில் 3A சித்தியைப் பெற்று தற்போது உயர்கல்வியைத் தொடர்கிறேன். நான் கடந்த வருடம் எனது முதலாவது நூலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

2)அது ஏன் "ஹட்டன்" பிரவீனா ?

ஹட்டன் தான் எனது ஊர். என்னை இத்தனை வருடம் தன்மடியில் தாங்கி வளர்த்துவரும் ஹட்டன் அன்னைமீது எனக்கு அலாதி பிரியம். எனது ஊரை அடையாளப்படுத்திக் கொள்வதில் நான் எப்பொழுதுமே கர்வம் கொள்வேன். அவ்வகையில் என்னை இச்சமூகத்தில் எனது ஊர் சார்பாக பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ளும் பொருட்டு "ஹட்டன் பிரவீனா" என்ற இப்பெயர் எனக்கு அமைந்துவிட்டது. படைப்பாளிகள் தத்தம் ஊர்மீது கொண்ட பற்றால் தம் பெயருடன் ஊரின் பெயரை இணைத்துக் கொள்வது அவர்களுக்கேயுரிய சிறப்புத்தன்மை என்றபோது நானொன்றும் விதிவிலக்கல்லவே!


3)பிரவீனா உங்களை நீங்கள் எவ்வாறு அறிமுகம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள் ? 

நான் கற்களையும், முட்களையும், மேடு-பள்ளங்களையும், சேற்றுப்புதர்களையும், ஆறுகளையும் கடந்து நரிகளினதும், ஓநாய்களினதும் ஓலங்களிலிருந்து விடுபட்டு, மாமிச உண்ணிகளிடமிருந்து என்னுயிர் காத்து உயரத்தே மிளிரும் பெருவெள்ள ஒளியினை அடைய எத்தனிக்கும் ஒரு காட்டுவழிப் பயணியாவேன். எனக்கு சிறுவயது தொட்டே கல்வியில் நாட்டம் அதிகம் என்பதால் எழுதுவதிலும் பேராவல் குடிகொண்டுவிட்டது. என் உள எண்ணங்களை மட்டுமே கடவுளாக ஏற்றுக் கொண்டு என்னுடல் தேயிலைக்கு உரமாகும் முன்பதாக என் எழுத்துக்களால் சாதித்துவிட வேண்டும் என்ற நம்பிக்கை மூச்சுடன் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதப்பிறவி நான். 

4) உங்களுடைய முதலாவது கவிதை நூல் "தூவல்" பற்றி ஒருசில வார்த்தைகள்...



"தூவல்" எனது கன்னிப்பனுவலாகும். இலக்கியக்கடலில் நான் மிதக்கவிட்டிருக்கும் கன்னிக்காகிதப்படகு. என் உள வெளிப்பாடுகள் பாமரனுக்கும் புரிய வேண்டும் என்ற உறுதியான நோக்கத்தில் அமையப்பெற்ற எளிய சொல்லாடல் மிகு கவிதைத் தொகுதியாகும். எனது எண்ணவெழுச்சிகளை அழகுறக்கோர்த்து பேனைக்கான தூயத்தமிழ் வார்த்தையான "தூவல்" என்பதை எனது நூலுக்கு நாமமாகச் சூடித்தந்தேன். 

5) தூவல் முழுக்க எதைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கியுள்ளது ?

எனது "தூவல்" கவிதைத் தொகுதியானது நாற்பத்தைந்து கவிதைகளையும் பின்னிணைப்பாக பதினாறு குறுங்கவிதைகளையும் உள்ளடக்கிய நூலாகும். அவற்றுள் இலங்கை மலையக மக்கள், பெண்ணியம், காதல், பணம்-உறவு நிலையாமை, கல்வியியல் தொடர்பான கவிதைகளுடன் பொதுநோக்குக் கவிதைகளும் அடங்குகின்றன.

6) உங்கள் நூலுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது உங்கள் மண்ணில் ?





எனது நூலுக்கு என் மண்ணில் கிடைத்த வரவேற்பு என்பது வெறுமனே வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. எனது பனுவல் வெளியீட்டு விழா 06/10/2019 அன்று ஹட்டன், பிரின்ஸ்(மினி)மண்டபத்தில் 
ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.என். பாலசுந்தரம் அவர்கள் தலைமையில் மாபெரும் வெற்றி கண்டது. வழமையான புத்தக வெளியீட்டு விழாக்களில் காண்பதற்கு அரிதான மக்கட்கூட்டம் எனது விழாவில் குழுமியிருந்தமை மன நிறைவைத்தந்தது. ஒரே நாளில் சுமார் நூறு புத்தகங்கள் அவையோர் கைகளிலே தவழ்ந்ததைக் காணக்கிடைத்த காட்சிக்கு மேலாகவும் எனது நூலுக்கு ஒரு வரவேற்பு கிடைத்துவிட முடியுமா என்ன......!




7)உங்கள் நூல்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம் ? 

எனது நூலைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் நேரடியாக என்னைத் தொடர்பு கொள்வதன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது, ஹட்டனில் கேசவன் புத்தகசாலை/ முரளி புக் சென்டரிலும், கொழும்பில் பூபாலசிங்கம் புத்தகசாலையிலும் (Poobalasingam book depot, sea street, Colombo), கண்டியில் கலைவாணி புத்தகசாலையிலும் (New kalaivani book centre, D.S. Senanayake street, Kandy), யாழ்ப்பாணத்தில் குயின்சி புத்தகசாலையிலும்(Quency book shop, KKS road, Jaffna) பெற்றுக் கொள்ளலாம். 

8)பிரவீனாவை கவிஞராக மற்றுமன்றி ஒரு வடிவமைப்பாளராகக் கூட அவதானிக்கிறோம், அதுபற்றி சொல்லுங்கள். 

கவிஞர் என்பது எனது கவித்திறனுக்குக் கிடைத்த பட்டம். அது தவிர்த்து நான் ஒரு ஆடை வடிவமைப்பாளர் ஆவேன். க.பொ.த (உ/த) பரீட்சையை நிறைவு செய்த பின்னர் நான் ஆரம்பித்த ஒரு விடயமே இவ் ஆடை வடிவமைப்பாகும். எனக்குக் கைகொடுத்து உதவி, நான் விழும் பொழுதுகளிலெல்லாம் என்னை எழுந்து நிற்கச் செய்து கொண்டிருக்கும் ஒரு ஊன்றுகோலாகவே நான் இதனைக் காண்கிறேன். 

9) ஆடைகளுக்கு ஆரி வேலைப்பாடு செய்கிறீர்கள் இல்லையா ? இந்த சுய கைத்தொழில் பற்றி கூறுங்கள்.



எனது ஆடைவடிவமைப்புத் தொழில் என்பது ஆரி வேலைப்பாட்டுடன் ( Aari Embroidery) தொடர்புபட்டது. இது இயந்திரமற்ற கைவேலைப்பாடாகும். மிகவும் நுணுக்கமான வேலைப்பாடாக இது அடையாளப்படுத்தப்படுகிறது. பொதுவாக தையல் இயந்திரம் புரியும் ஒவ்வொரு தொழிலையும் இரண்டு கைகளால் செய்து முடிக்க வேண்டும். வட்ட வடிவ சட்டகத்தில் துணி பொருத்தப்பட்டு பின்னல் உபகரணத்தினால் நூலைப் பின்னி இணைப்பதன் மூலம் இவ்வேலைப்பாடு செய்யப்படும். வேலைப்பாட்டின் தரமும் பெறுமதியும் கருதி பொதுவாக இது பட்டு உடைகளுக்கே பொருத்தமாக அமையும். திருமண மற்றும் சுபகாரியங்களுக்கான பெண்களின் உடைகளை அலங்கரிப்பதில் இவ்வேலைப்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலதிக விபரங்களுக்கு: 

10) உங்களது பொழுது போக்கு 

எனது பொழுது என்பது வெள்ளைத்தாளில் மைபரப்பி எண்ணங்களை விதைப்பதிலேயே கழிந்துவிடும். இப்பொழுதெல்லாம் கைத்தொலைபேசி தாளுடனும், பேனையுடனும் போட்டிப்போட்டு முந்திக்கொள்வதென்னவோ நிதர்சனம் தான். நான் எனது ஓய்வு நேரத்தில் எனது கற்பனைகளை படைப்புகளாக இணையதளத்திற்கு தாரைவார்த்துக் கொண்டிருப்பேன். அதையும் தாண்டி துணியுடனும், ஊசி-நூலுடனும் அம்மாவுடன் பல சுவாரஸ்யமான உரையாடல்களுடன் எனது பொழுது போய்க்கொண்டிருக்கும். 

11)எழுத்துத்துறையில் கவிதை தவிர்ந்து வேறென்னென்ன துறைகளில் ஆர்வம் இருக்கிறது?

எழுத்துத்துறையில் கவிதை தவிர்ந்து சிறுகதை மற்றும் கட்டுரைத் துறைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். நான் முதலாவதாக சமூகத்தில் வெளிப்பட்டது கவிதைத்துறையில்தான் எனினும் அதைவிட பற்றும் ஆர்வமும் எனக்கு சிறுகதைத்துறையில் தான் உண்டு என்பது நிச்சயமான உண்மை.

12) மலையகத்தில் எழுத்தாளர்கள் உருவாவதே அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் நடந்து வருகிறது, அதிலும் குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைவு இதற்கு என்ன காரணம் ?

மலையகத்தில் எழுத்தாளர்களின் உருவாக்கம் தாழ்வு நிலையில் இருப்பதற்கு சமூக, பொருளாதார காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தனது எழுத்துத் திறமையை 
வெளிக்காட்டிக்கொள்ள மலையகத்தில் சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் மேலும் அமையப்பெற வேண்டும். அதிலும் பெண் எழுத்தாளர்கள் என்பது மிக அரிது. நமது சமூகம் பெண்களின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதில் சளைத்ததல்ல. பெண்கள் துணிச்சலுடன் எழுத்துத்துறையில் கால்தடம் பதிக்க வேண்டும் என்பது என் அவாவும் கூட.

13)இந்த எழுத்துத்துறையில் மலையகப் பெண்களையும் ஈடுபடுத்த மற்றும் அவர்கள் ஈடுபட எது தடையாக உள்ளது? அதைத் தகர்க்கும் வழிவகைகள் என்னென்ன?

 எழுத்துத்துறையில் மலையகப் பெண்கள் ஈடுபடுவதற்கு தடைகளாக சமூகம் மீதான பயம், குடும்பப் பொறுப்புக்கள், அலட்சியப்போக்கு, அர்ப்பணிப்புக்குத் தயாரின்மை என்பவற்றைப் பிரதானமாகக் காணலாம். அது தவிர்த்து பெண்களை வெளியுலகுக்கு கொண்டு சேர்ப்பதில் குடும்பத்தாரினது பேராதரவும் அவசியமாகும். அவ்வகையில் மலையகப் பெண்களைப் பொறுத்தவரையில் அவ் ஆதரவு எளிதில் கிட்டுவதில்லை என்பது வருந்தத்தகு விடயமாகும். மலையக மக்களினது சிந்தனை தூரநோக்குப் பார்வையுடன் இருக்குமாயின் மலையக எழுத்தாளர்களும் எதிலும் சளைத்தவர்களல்ல என்பதை நிச்சயமாக உணர்த்திவிட இயலும்.

14)மலையகப் படைப்பாளிகளின் படைப்புகளைப் படிக்கிறீர்களா? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

மலையக இலக்கியத்துறை மற்றும் வாசிப்புத்துறையைப் பொருத்தமட்டில் நான் ஒரு தவழும் குழந்தை. அவ்வகையில் நான் இப்பொழுது தான் எழுத்துத்துறையில் புகுந்து மலையகப் படைப்புக்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதில் நான் பேரனுபவம் காண எனக்கு இன்னும் காலம் செல்லும். 

15) பிரவீனா ஏனைய இலங்கை, இந்திய எழுத்தாளர்களின் நூல்களைப் படிப்பீர்களா ? 
உள்ளூர் வெளியூர் பிடித்த எழுத்தாளர்களும் அவர்களின் நூலையும் பரிந்துரைக்கலாமே....!

மலையகம் தாண்டி நான் விரும்பும் இந்திய எழுத்தாளர் என்றால் திரு. வைரமுத்து அவர்களைத்தான் கூறுவேன். ஐயாவினுடைய படைப்புக்களைப் படித்தது மட்டுமல்லாது அவரது படைப்புகளில் பெரும் நாட்டமும் கொண்டிருக்கின்றேன். நான் முன்பே கூறியது போல பள்ளிப்படிப்பு நிறைவெய்தி இலக்கிய வட்டத்திற்குள் நுழைந்திருக்கும் இத்தருணத்திலே நான் துறைதோய்ந்தவளல்ல. ஆகவே படைப்பாளிகள் நூல்களை பரிந்துரை செய்யும் அளவிற்கு தற்சமயம் எனக்கு வளர்ச்சியோ, அனுபவமோ போதாதென்பது மறுக்கமுடியா உண்மை.

16) பிரவீனா வாசிப்பில் எவ்வளவு நாட்டமுள்ளவர்?

பிரவீனா வாசிப்பில் நிச்சயம் மிகுந்த நாட்டமுடையவள் தான். சிறுபராயம் தொட்டே கிடைப்பதெல்லாம் வாசித்துவிடும் பழக்கம் என்னிடம் உண்டு. பிற்பட்ட காலங்களில் பல்வேறு காரணிகளால் வாசிப்புக்காக நான் செலவிடும் நேரம் குறைந்துவிட்டதுதானே தவிர நாட்டம் ஒருபோதும் குறையப்போவதில்லை. இனிவரும் காலங்களில் எனது வாசிப்பு முயற்சிக்கு தடையான காரணிகளைத் தகர்த்தெறிந்துவிட முயற்சிக்கிறேன்.

17)உங்களது அடுத்த வெளியீடு என்ன?
எப்போது ?

எனது அடுத்த வெளியீடு பற்றிய சிந்தனைக்கு இனிமேல்தான் விதையிட வேண்டும். நிச்சயமாக எனது அடுத்த வெளியீடு கவிதைத்துறை தவிர்த்து வேறொரு துறையாக அமையும் என்று கூறிக் கொள்கிறேன். அது சிறுகதையாகவோ, கட்டுரை சார்ந்ததாகவோ இருக்குமாயின் மலையக சாடல் நிச்சயமிருக்கும். தோட்டத்தொழிலும் லயத்து வாழ்க்கையும் எனக்குப் பழக்கமில்லை எனும்போதும் நான் அவற்றை ஆராதிக்க விழைகிறேன். அல்லது எனது அடுத்த வெளியீடு   மாணவர்களுக்குரிய பாடநெறி தொடர்பானதாக அமையப்பெறவும் வாய்ப்புகள் அதிகம். 

18) மலையக எழுத்தாளர்களின் நூல்கள் வாசகர்களிடம் போய்ச் சேருவதில் பெரும் சிக்கல் நிலவுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? குறிப்பாக மலையகத்தில் ஏனைய பிரதேசங்களில் போல நூல் கண்காட்சிகளோ புத்தக விற்பனையோ பெரிதாய் இல்லையே ....!

மலையகத்தில் புத்தகக் கண்காட்சிகளும், விற்பனைகளும் அதிகமாக வேண்டும் என்றால் அதில் ஒட்டுமொத்த மலையகத்தினதும் பங்களிப்பு மிக அவசியமாகும். மக்களின் வாசிப்பு நாட்டமும், மலையகம் சார்ந்த மற்றும் சாராதோரின் வரவேற்பும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இது தானாகவே நிகழ்ந்துவிடும்.

19) இன்றைய நிலையில் மலையகத்தில் எழுத்தாளர்களுக்கென்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ரீதியிலான குழுவோ அமைப்போ இல்லையே இதற்கு என்ன காரணம்?

மலையகத்தில் எழுத்தாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளை உருவாக்குவதென்பது எளிதான விடயமல்ல. அதற்கு ஆர்வமுள்ளவர்கள் மனமுவந்து இணைவது மட்டுமல்லாது அர்ப்பணிக்கும் மனப்பான்மையுடனும் செயற்படுதல் வேண்டும். பொருளாதார ரீதியான உதவிகளைப் பெறுதல் வேண்டும். எழுத்தாளர்களை இனங்கண்டு ஒன்றிணைத்து படைப்புக்களையும் ஒன்றுதிரட்ட வேண்டும். இவை தொடர்பான தனிப்பட்டவரின் அலட்சியத்தன்மைதான் இவ்வாறான அமைப்பு உருவாகாமலிருப்பதற்கு காரணம். குழு ஒற்றுமையும் விடா முயற்சியும் இருக்குமிடத்து இவ்விடயம் நிச்சயம் சாத்தியமேயாகும்.

20)மலையக எழுத்துச் சூழலில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக பரவலான பேச்சுக்கள் உள்ளன. உங்கள் கருத்து?

மலையக எழுத்துச் சூழலில் அரசியல் தலையீடுகள் இருக்கின்றன என்று நான் ஒட்டுமொத்தமாகக் கூறிவிடமாட்டேன். எழுத்தாளர்கள் மலையக அரசியலில் உள்வாங்கப்பட்டு இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற சிக்கல்களும் சவால்களும் எழத்தான் செய்கின்றன. எழுத்தாளர் சமூகத்தில் ஒருசிலருக்கு அரசியல் ஆதிக்கம் இருக்குமாயின் இதன்மூலம் ஏனையோர் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் அரசியல் குழுக்களிடையான முரண்பாடுகளும், கருத்துமோதல்களும், விமர்சனங்களும் சமூகத்தின் மீது திணிக்கப்படுவதாலேயே மலையக எழுத்துச்சூழலில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக பேச்சுக்கள் பரவலாகின்றன. 

21) கவிதைகள் குறித்து பிரவீனாவின் பார்வையில்....

என்னைப் பொறுத்தவரை அடிப்படை அம்சங்கள் தவிர்த்து கவிதை என்பது மனம் பிரசவிக்கும் அழகிய குழந்தை. எண்ணத்தின் தாம்பத்தியத்தில் கனவு சிசு உருவாகிட, வரிகளாகிய தொப்புள்கொடி உணர்ச்சிகளை ஊட்டிட, கருவறையில் கர்ப்பமாய் அமைதியில் சுழன்று, கற்பனைக்குடம் உடைந்து பேனையின் முனையிலே மையின் வண்ணம் பிரசவத்தின் அறிகுறியாகி காகிதக்கட்டிலில் பிறந்திடும் குழந்தையே கவிதை என நான் வரையறுப்பேன். இவ்வரிகளை "கவிஞனும் தாயானான்" என்ற எனது கவிதையில் காணக்கூடியதாக இருக்கும்.

22) நவீன உலகில் சாதிக்கத் துடிக்கும் பெண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் எவை? அதனை தீர்ப்பதற்கான வழிவகைகள் எவை? 

பெண்களுக்குரிய பிரதான பிரச்சினை சமூகக்கட்டமைப்பு தான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கூறி கூறி வந்த சமுதாயம் இப்போதுதான் பெண்களுக்கும் அங்கீகாரம் வழங்கி ஆதரவு நல்க தயாராகியிருக்கிறது. இப்போது பெண்கள் சாதிக்காத துறையில்லை ஆயினும், அந்த சாதனைகள் பிரச்சினைகளின்றி இலகுவில் வெளிப்பட்டவையாக இருக்க முடியாது. அவற்றுள் சமூகம் மீதான அச்சம், குடும்பப் பொறுப்புக்கள், குடும்ப சூழ்நிலைகள், ஆதரவு போதாமை, பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். என்னைப் பொறுத்தவரை சாதிக்கும் துடிக்கும் பெண்கள் தம் சாதனையை வெளிக்கொணர முன் தாம் சார்ந்த சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பாரிய கடப்பாடு உடையவர்களாவர். சமூகம் விழிப்பின், பெண்கள் நவீன கால வளங்களைப் பயன்படுத்திக் கொண்டு துணிவுடன் சாதிக்க முடியும்.

23)இதுவரையான உங்கள் வாழ்வில் நன்றிக்குரியவர்கள் பற்றி...

 எனது வாழ்க்கையில் நான் முதலாவது நன்றிக்கடன் பட்டிருப்பது எனது பாடசாலைக்குத்தான். என்னையும் என் தமிழ் பற்றையும் வளர்த்துவிட்டதில் ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரிக்குப் பாரிய பங்குண்டு. அடுத்ததாக எனது முயற்சிகளுக்கு தடை விதிக்காது ஆதரவு நல்கிய என் பெற்றோருக்கும், மேலும் எனது வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நன்றி.

Post a Comment

0 Comments