Subscribe Us

header ads

ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரி

ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரி
    (-பெயருக்கு நாம் தகுதியானவர்தானா?)


     சமூக வலைதளங்களிலே தத்தம் கணக்குகளின் முகப்புக்களில் "Highlander", "Proud to be a Highlander", "Went to Highlands College", "We are Highlanders,We are always No.1" ஆகிய சொற்பதங்களை நாம் பெருமிதத்துடன் தட்டச்சிட்டு காட்சிப்படுத்துகிறோமென்றால் அப்பெருமிதத்தின் பின்னே அந்த பெயருக்கான நமது உழைப்பு எத்தனை வீதம் இருக்கிறது என்று ஒரு நொடிப்பொழுதேனும் சிந்தித்துப் பார்த்திருப்போமா? வெறுமனே இரண்டு மாதங்கள் மட்டுமே கற்றோரெல்லாம் கல்வி கற்ற பாடசாலை ஹைலன்ஸ் கல்லூரி எனப்பதிவிட்டு தமக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள  முனைகின்றனரென்றால் ஹைலன்ஸ் கல்லூரியின் வளர்ச்சிக்கு நாம் வித்திட்டோமா என்ற கேள்வி நமக்குள் நிச்சயம் எழத்தான் வேண்டும். இந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தோர் யாரென்பதை நாம் சிந்திக்கவும் வேண்டும்.   இன்று எல்லோரும் பறைசாற்றிக் கொள்ளும் ஹைலன்ஸ் கல்லூரியின் வளர்ச்சியின் பின்னே எத்தனை எத்தனை பேரின் சுயமுயற்சியும், கடின உழைப்பும், வியர்வையும் இருக்கிறதென்று அறிவோமா? வெறுமனே ஹைலன்ஸ் கல்லூரி என பெருமிதமாய் பதிவிடும் அனைவரும் மனதளவில் உணரவேண்டிய ஒரு விடயமிது!

     ஹட்டன் சிங்கமலை  அடிவாரத்திலே தேயிலைச்செடிகளின் மத்தியிலே அமைந்திருந்தது மெதடிஸ்ட் கிறிஸ்தவ தேவாலயம். அதனருகே 1892ஆம் ஆண்டு ஹட்டன், புகையிரநிலைய அதிகாரியின் ஒரு சிறிய வீடு. அவரது மனையாள் தனது வீட்டில் சின்னஞ்சிறார்களுக்கு ஆங்கிலப்பாடம் கற்பித்து வந்தார். அந்த அம்மையார் இட்ட வித்து தான் இன்று ஹட்டன் நகரில் பாரிய விருட்சமாய் வளர்ந்து நிற்கிறதென்றால் அது மிகையாகாது.

     சிறார்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தாலும் பெற்றோரின் உதவியாலும் ஆங்கிலேயர் இடமளிக்க, தற்போதைய ஹட்டன், ஸ்ரீபாத கல்லூரியின் அருகில் அமைந்துள்ள வழிபாட்டுத்தலமான மெதடிஸ்ட் தேவாலயத்தில் மெதடிஸ்ட்மிஷன் பாடசாலையாக முதற்பரிணாமமெடுத்தது. காலப்போக்கில் மாணவர் தொகை மேலும் அதிகரிக்கவே 1910 ஆம் ஆண்டில் மெதடிஸ்ட்மிஷன் வணக்கத்துக்குரிய ஆர்.எஸ்.பீடி என்பவர் தலைமையில் இப்பாடசாலையை தம்  பொறுப்பில் ஏற்றுக்கொண்டது. அவரின் பின் வணக்கத்துக்குரிய போதகர் "கோனிஸ்" என்பவரும் இன்னும் சிலரும் தனியான பாடசாலை அமைக்க திருச்சபையிடம் கோரி தற்போதைய ஹைலன்ஸ் கல்லாரியின் அமைவிடத்தை வாங்கி ஒரு கட்டடத்தை எழுப்பினர்.(தற்போது உடைக்கப்பட்ட கோனிஸ் மண்டபம்). அப்பாடசாலைக்கு "வெஸ்லிமிஷன்" ஆண்கள் பாடசாலை எனப் பெயருமிட்டனர். இதுவே ஹட்டன் நகரில் முதன்முதலில் தோன்றிய ஒரே பாடசாலையாகும். ராப்பகலாக ஆசிரியர்கள் ஆற்றிய சேவையின் நிமித்தம் 1928 இல் மேலும் மாணவர் வரவும், தொகையும் அதிகரிக்க, மேலும் இடவசதி தேவைப்பட்டது. அச்சமயம் வணக்கத்துக்குரிய போதகர் "தோப்" என்பவர் ஒரு கட்டடத்தை அமைத்தார். அது "தோப்" மண்டபம் எனப்பெயரிடப்பட்டது. இந்த வெஸ்லிமிஷன் பாடசாலையில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் ஆகியோர் சாதி, மத பேதமின்றி கூடிக்குலாவி கல்வி கற்ற காலம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது.

     1921இல் "வெஸ்லிமிஷன் ஆண்கள் பாடசாலை"-"வெஸ்லிமிஷன் ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. முதலில் ஆரம்பப்பாடசாலை விடுகைப்பத்திரம் வரை கல்வி போதிக்கப்பட்டது. பின் மாணவர் தொகை அதிகரிப்பால் கனிஷ்ட பாடசாலை விடுகைப்பத்திரம் வரை தரமுயர்த்தப்பட்டது. அதன் பின்னரே அரச பரீட்சைகள் அரங்கேறின. 1931-11-30 ஆம் திகதி அக்கால கிறிஸ்தவ மத போதகர் தன் மகளை இப்பாடசாலையில் சேர்த்து "மெதடிஸ்ட் தமிழ்-சிங்கள கலவன் பாடசாலை" எனப்  பெயர்மாற்றம் செய்தார். அதன் பின்தான் பெண்பிள்ளைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. 1941-07-01 இல் சிரேஷ்ட பாடசாலை  விடுகைப்பத்திரம் வரை கல்வித்தரம் மேலும் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர், 1942இல் தான் இப்பாடசாலை "ஹைலன்ஸ் கல்லூரி" எனப்பெயர் பெற்றது.  (High-உயர், land-நிலம்) உயர்ந்த நிலப்பகுதியில் இப்பாடசாலை அமையப்பெற்றதால் ஹைலன்ஸ் கல்லூரி என்பது காரணப்பெயர் பெற்றது. 1945-1946 வரை இது ஆங்கில பாடசாலையாகவே இருந்தது. பின்னர், "ஹைலன்ஸ் மத்திய கல்லாரி" என்று தமிழ்பாடசாலையாக உருப்பெற்று இன்று மீண்டும் "ஹைலன்ஸ் கல்லூரி" எனப் புகழ்பெற்றுத் திகழ்கிறது.

     பிற்பட்ட காலங்களில் நெல்சன் மண்டபம், விஞ்ஞான ஆய்வுகூடம், தாவரவியல்-விலங்கியல் ஆய்வுகூடங்கள், நூலகம், பிரதான மண்டபம், என ஒவ்வொரு கட்டடமாக எழ ஆரம்பித்து இன்று ஹைலன்ஸ் கல்லூரி கட்டடச் சங்கமமாக உயர்ந்திருக்கிறதென்றால் இதற்கு வித்திட்ட உழைப்பாளர்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது. 2006 இல் மீண்டும் தரம் ஆறிற்கு மேல் ஆங்கிலப்பிரிவு  கல்லூரியின் மேற்பிரிவிலே ஆரம்பிக்கப்பட்டது. இதுதான் எமது கல்லூரி பெயர் பெற்ற வரலாற்றின் நூற்றில் சுமார்  ஐந்து வீதம்.

     நூற்றாண்டு கடந்த எமது ஹைலன்ஸ் கல்லூரியில் சேவையாற்றிய நூற்றுக்கணக்கான அதிபர், ஆசிரியர்கள் மட்டுமல்ல, அக்கால மதப்போதகர்கள், பெற்றோர்கள், அரும்பணியாற்றிய சான்றோர்கள், பழைய மாணவர்கள், நகர வர்த்தகர்கள், உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் ஆகிய அனைவரதும் குருதி ஹைலன்ஸ் கல்லூரியின் வரலாற்றில் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனை பேர் உழைப்பில் பெற்றுக்கொண்ட பெயரினை வெறுமனே பெருமைக்காக பயன்படுத்திக் கொள்கிறோமென்பது வருந்தத்தகு விடயமே! விரலிக்கனிகள் பறித்த மரங்களுக்கு ஓர்நாளேனும் நீர் ஊற்றினோமா என்பதை சிந்திக்கத் தவறிவிட்டோமே!

     அன்று ஹைலன்ஸ் கல்லூரியின் கட்டட நிர்மாணப்பணிகளுக்காக தலா ஐம்பது ரூபாய் வழங்கியுதவிய பெற்றோர்கள் இன்று தலா நூறாயிரம் ரூபாய் வழங்குகின்றனர். அந்த உழைப்புக்கு சரி நாம் உறுதுணையாய் இருக்கின்றோமா? கல்வி பயின்றதைத்தவிர்த்து என்ன செய்துவிட்டோம்! வருடாவருடம் மறக்காமல் எங்கேனும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்வது இப்போதெல்லாம் கலாசாரமாகி வருகிறது. ஒன்றுகூடல் எனும் பெயரில் கேக் வெட்டி ஆட்டமும் பாட்டமுமாய் உண்டு களித்து பணமெனும் தாள்களின் பெறுமதியை நாளுக்கு நாள் உயர்த்திக் கொண்டு செல்லும் எமக்கு ஏன் நம் கல்லூரியில் ஒரு மரமேனும் நாட்ட மனம் வராமல் போனது? கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்த ஏன் நேரம் ஒதுக்கமுடியாமல் போனது? எமது கல்லூரியில் ஒரு கல்லையேனும் அசைத்துக் கொடுக்காத நாமெல்லாம் ஒவ்வொரு இடத்திலும் நம் கல்லூரியைப் பறைசாற்றும் பொழுதுகளிலெல்லாம் மனதளவில் வெட்கித்து தலைகுனிய வேண்டும்.

     "நாம்","நாம்" என்று கூறுகிறேனே, என்னையும் சேர்த்து தான் கூறுகிறேன். நானொன்றும் விதிவிலக்கல்லவே! "ஹைலன்ஸ் கல்லூரி,ஹட்டன்" என்ற பதம் எனக்கு என்றுமே பெருமையில்லை.  2002-2015வரை பதின்மூன்று வருடங்கள் என்னைத் தூக்கிச் சுமந்து தாலாட்டி வளர்த்து ஆளாக்கியமைக்காக ஹைலன்ஸ் கல்லூரி ஓர்நாள் பெருமை கொள்ளுமாயின் அதுவே என் பெருமையாக அமையும்!

-ஹட்டன் பிரவீனா.

(*ஆசிரியரின் அனுமதியின்றி படைப்பை அவ்வண்ணமே நகலிடுவதைத் தவிர்த்துக் கொள்ளவும்)

(உசாத்துணை-தமிழ்த்தென்றல், யுகவிழி)

Post a Comment

0 Comments