Subscribe Us

header ads

ஆசிரியர்களின் வெற்றி எது?

புதிதாய்ப் பூக்க வேண்டும்

     மழலை பேசி மகிழ்வாய் ஓடியாடி விளையாடித்திரிந்த சின்னஞ்சிறு குழந்தைகள் பெற்ற முகம் பிரிந்து கல்வியெனும் புதுவாழ்வுதனில் அழுகையுடன் அடியெடுத்து வைக்கையிலே இன்னுமொரு தாயாய் தொட்டுத்தூக்கி அரவணைத்து அன்பெனும் சாரலை மென்மையாகப் பொழிந்து அக்குழந்தையின் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக்க இந்த பிரபஞ்சம் உருவாக்கித்தந்த உன்னதமான உயிர்களே "ஆசிரியர்கள்". வாழ்க்கை எனும் ஏணிப்படிகளில் ஒரு பிள்ளை ஏறிச் செல்ல முற்படும் போது அதிலுள்ள ஆணிகள் பிஞ்சுப்பாதங்களைக் காயப்படுத்தாமலும், உடைந்த படிகளில் பிள்ளை தடுமாறாமலும், சறுக்கி விழும் பொழுதுகளிலெல்லாம் மனந்தளராமலும் தூக்கி நிறுத்தி சிப்பி முத்தினைப் பாதுகாப்பது போல காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இவர்களுக்குரியதேயாகும்.

     இத்தகைய மகத்தான சேவையாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் மனங்களை வெற்றி கொள்கின்றனரா எனக்கேட்டால் ஐயத்துடன் கேள்விக்குறிகள் தான் தொடர்ச்சியாக நீண்டு செல்கின்றன.
     "வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
         உள்ளத்து அனையது உயர்வு"

                 என்ற வள்ளுவர்ப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, ஒரு ஆசிரியர் மாணவனுக்கு எந்தளவு விடயத்தை உட்செலுத்துகிறாரோ அதே அளவைத்தான் மாணவனிடமிருந்தும் எதிர்ப்பார்க்கவும் முடியும்.  "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என ஒரு ஆசிரியர் தனது தேடலில் வரையறையிட்டால் மாணவனும் தனது தேடலில் அதையேத்தான் சிந்திப்பான் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.  ஆசிரியரிடமிருந்து ஒரு மாணவன் எதை எதிர்ப்பார்க்கின்றானோ அதை அவர் வழங்குமிடத்து கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் இடர்பாடுகள் ஏற்படாது. ஆகவே, மாணவர்களின் எதிர்ப்பார்ப்புக்களை அறிந்து அவற்றை நிறைவேற்ற வேண்டியது ஆசிரியர்களின் கடமையேயாகும்.

      வகுப்பினுள் நுழையும் ஆசிரியர் தினமும் என்ன புதிய விடயத்தை எடுத்து வருகிறார் என ஒவ்வொரு மாணவனதும் மனவலைகள் எதிர்ப்பார்த்துத் தத்தளித்துக் கொண்டிருக்கும். மாறாக, அவர் வழமையான விடயத்தையே தான் எடுத்து வருவாரானால் அத்தகைய சந்தர்ப்பங்களில் தான் மாணவர்களின் எதிர்ப்பார்ப்பு உடைக்கப்பட்டு கல்விமீதான சலிப்புநிலை ஏற்படுகிறது. அமர்வதற்கு கதிரை இருக்கிறதா?, அனைவரிடமும் பாடப்புத்தகம் இருக்கிறதா?, கரும்பலகை தூய்மையாக இருக்கிறதா?, வெண்கட்டி, அழிப்பான் இருக்கிறதா? என்றெல்லாம் சரிபார்க்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் மனநிலை, விடயத்தை உள்வாங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கிறதா? என சரிபார்க்கத் தவறிவிடுகின்றனர் என்பதே நிதர்சனம். உயிரற்ற பொருட்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் உயிருள்ள மனங்களுக்கு இல்லாமல் போவதன் காரணமும் தான் என்ன? நாம் உயிருள்ள பொருட்களைக் கையாளுகின்றோம், அவற்றிற்கும் உணர்வு இருக்கிறது, காயமொன்று ஏற்பட்டால் அவற்றிற்கும் வலிக்கும் என்ற சிந்தனை வகுப்பிற்குள் நுழையும் ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருக்கவேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் போது மாணவனின் சிந்தனைமட்டமும் உயர்ந்துகொண்டே செல்லும். கற்கத் தொடங்குபவன் மாணவன்; கற்றுக்கொண்டே இருப்பவன்தான் ஆசிரியன்.

      வெறுமனே பாடப்புத்தகத்திலுள்ள விடயங்களை மாணவர்களின் மூளைக்குள் புகுத்துவதோடு மட்டும் ஒரு ஆசிரியரின் கடமை நிறைவெய்திவிடாது. ஒருவனை சமூகத்தில் ஒழுக்கமானவனாகவும், அடுத்த தலைமுறையினருக்கு முன் உதாரணமானவனாகவும் நிறுத்த வேண்டியதும் அவர்களின் தலையாய கடமையாகும். அவ்வகையில் ஒழுக்கத்தைப் புகட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் வன்முறை என்றால் அது வருந்தத்தகு விடயமாகும். மனதில் பதியாத விடயமொன்றை பிரம்பால் அடித்துக் கூறுவதால் மாணவனின் மனதில் பதியப்போவது அந்த அடி மட்டும்தானே தவிர வேறொன்றும் கிடையாது. பரவலாக ஆசிரியர்கள் பயன்படுத்தும் பழமொழி "அடி உதவுவதைப்போல் அண்ணன், தம்பி உதவமாட்டார்" என்பதாகும். இது முற்றிலும் தவறான புரிதலேயாகும். இப்பழொழியின் உண்மையான பொருள் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம்மை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டுசேர்க்க உதவுகிறது. ஆனால் அதுபோல அண்ணன், தம்பி மட்டுமல்ல, எந்தவொரு உறவும் உதவாது என்பதாகுமே தவிர வினையைக்குறிக்கும் அடி அல்ல அது என்பதைத் தெளிவாக உணர வேண்டும். இவ்வுலகில் அன்பால் சாதிக்க முடியாததென்று எதுவுமே கிடையாது. அவ்வகையில் மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பதும் அளப்பரிய அன்பைத்தான். ஆசிரியர்கள்  அதை முறையாக வெளிப்படுத்துமிடத்து மாணவர்களின் நிலை நிச்சயமாக உயரும்.

     ஆசிரியரின் வெற்றி ஒரு  மாணவனின் பரீட்சை பெறுபேற்றில் தான் தங்கியிருக்கிறது என்றால் அது போலியான வெற்றியாகும். ஒரு மாணவனின் மனதில் அவ்வாசிரியர் எத்தகைய இடத்தில் இருக்கிறார் என்பதே ஒரு ஆசிரியரின் உண்மையான, உறுதியான வெற்றியைத் தீர்மானிக்கிறது.  கற்பித்தலை கடமையாக செய்வது வேறு; கடமைக்காக செய்வதென்பது வேறு. கல்வி வியாபாரமாகிக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலே தனியார் வகுப்புகளின் பெருக்கத்தால் பாடசாலை மீதான நாட்டம் குறைந்து விளம்பரப்படுத்தல்களின் மூலம் பல ஆசிரியர்களின் வங்கிக்கணக்குகளின் பெறுமதிதான் உயர்ந்து கொண்டிருக்கின்றனவே தவிர மாணவர்களின் கல்வியோ, வாழ்க்கையோ முழுமையடைவதில்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஒரு பாடசாலையின் மீது மாணவர்களும் பெற்றோர்களும் முழுமையான நம்பிக்கை செலுத்தி, ஆசிரியர்களும் அவர்களது தொழிலை தகுந்த முறையில் புரிந்திருந்தால் இத்தகைய தனியார் வகுப்பு என்ற கலாசாரம் உருவாகியிருக்க வாய்ப்பேயில்லை. ஒரு மாணவன் கல்வியுடன் பலவழிகளில் போர் புரிந்துதான் சிறந்த பெறுபேறுகளை  வெளித்தள்ளுகிறான், ஆனால் அவனுக்கும் அவனது ஆசானுக்குமிடையிலான உறவு வலுவிழந்ததாகவே இருக்கிறது. அந்த உறவை வலுவுடையதாக  அமைத்துக் கொண்டால் கல்வியுடன் போராட வேண்டிய சூழல் உருவாகாது. தவிர்க்க முடியாத காரணங்களால்  ஆசிரியர்- மாணவர் பிரிவு ஏற்படும் பல தருணங்களில் மனமுருகி அழும் மாணவர்களையோ, ஆசிரியர்களையோ இன்றைய காலகட்டங்களில் காணுவதே அரிதாகத்தான் இருக்கிறது.

    ஒரு ஆசிரியர் ஒரு மாணவனுக்கு தாயாக, தகப்பனாக, சகோதரராக, நண்பராக ஏன் தெய்வமாகக்கூட இருக்கமுடியும், ஆனால் தற்போதைய நடப்புக்களில் இத்தகைய உன்னதமான உறவு பாலியல் வல்லுறவு என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றமைக்கு ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர் எனும் பதவியின் வலிமையைப் பயன்படுத்திக்கொண்டு தனது தொழிலுக்கே கேடு விளைவிக்கும் சில கீழ்தரமான செயற்பாடுகளும் பாடசாலைகளில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்றால் அத்தகையவர்கள் ஆசிரியர் எனும் அறப்பணிக்குப் பொருத்தமற்றவர்களாவர். இவர்கள் "தொழில் பக்தி" என்ற வார்த்தைக்கு தகுதியற்றவர்களாகவே கருதப்படுவர். இந்த சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆசான்களே அதனை சீர்குலைப்பார்களாயின் எதிர்கால சமுதாயத்தின் நிலைதான் என்ன?

      "சேவை" என்ற பட்டியலுக்குள் அடங்கும் ஆசிரியர் பணி வேறெந்த தொழிலுக்கும் நிகராகாது. அதனால்தான் வைத்தியரை தெய்வமெனப் போற்றினும் அவ்வைத்தியரை ஒருபோதும் மாதா, பிதா,குரு, தெய்வம் என்ற வரையறைக்கு உட்படுத்துவதில்லை. வைத்தியரொருவரை உருவாக்கியதே ஒரு ஆசிரியர் தான் என்பதை நாம் உளமாறவுணர வேண்டும். எந்தவொரு எதிர்ப்பார்ப்புமின்றி மாணவர்களின் வாழ்க்கையை தரமுயர்த்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள்  மாணவர்களின் மனங்களை வெற்றிகொள்ள வேண்டுமென்பதே அடிப்படையாகும். மாணாக்கரின் பிஞ்சு மனங்களில் பண்பெனும் விதை விதைக்கப்பட்டு, அன்பெனும் நீர் ஊற்றப்பட்டு, மாண்பெனும் உரம் தூவப்பட்டு நாளைய சமுதாயத்தில் அவை பாரிய விருட்சங்களாக  தழைத்தோங்கி அவர்களில் ஆசிரியர்கள் புதிதாய்ப் பூக்க வேண்டும்....

-ஹட்டன் பிரவீனா

வீரகேசரி: 09/06/2019 (ஞாயிற்றுக்கிழமை)





Post a Comment

0 Comments