வார்த்தையின் வேகம்
(வார்த்தை- வாழ்வளிக்கும்/வாழ்வழிக்கும்)
"எள்ளைக்கொட்டினாலும் அள்ளிவிடலாம்; சொல்லைக் கொட்டினால் அள்ளவே முடியாது" என்று பெரியோர் கூறக் கேட்டிருப்போம். இதுதான் உண்மை என பலருக்கு காலம் உணர்த்திவிடுகிறது; இதை உணராதவர்கள் சரமாரியாக வார்த்தைகளை அள்ளியிரைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.
வார்த்தை என்பது மிகவும் வலிமை மிக்கது. ஒரு வார்த்தை ஒருவருக்கு வாழ்வளிக்குமளவு வலியது என்று கூறுவதைக்காட்டிலும் ஒரு வார்த்தை ஒருவரின் வாழ்வை அழிக்கக்கூடியது என்று கூறின் வார்த்தையின் வலிமையை மேலும் சிறப்பாக உணரமுடியுமெனக் கருதுகிறேன்.
நாம் வெளிப்படுத்தும் வார்த்தை மற்றும் வார்த்தைப் பிரயோகம் இன்னுமொருவரை சென்றடையப் போவதாகும். அவர் நம் சார்ந்தவராகவோ, சாராதவராகவோ இருக்கலாம். நம் வார்த்தை யாரை சென்றடையவிருக்கிறதோ, அவரது மனநிலை அறிந்ததாய் நம் வார்த்தைப்பிரயோகம் அமைதல் கட்டாயமானது.
உடலியல் ரீதியில் ஒருவரை துன்புறுத்தினால் குறித்த காலத்தில் அக்காயம் ஆறிவிடும். உளரீதியில் தாக்கினோம் என்றால் அதுகாலத்துக்கும் அழியாத காயமாகும். அத்தகைய அழியாத காயங்களை உருவாக்கும் சக்தி நம் வார்த்தைகளுக்கே உண்டு. இதைத்தான் வள்ளுவர்,
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
என்று ஈரடிகளில் எடுத்தியம்பினார்.
ஆக,
நம் வார்த்தைகள் பிறர் மனநிலை அறிந்ததாய் அமையட்டும்/ பிறரைக் காயப்படுத்தாத வகையில் அமையட்டும்.(அவர் ஏற்கனவே காயப்பட்டவராக இருக்கலாம், மன அழுத்த நோயாளியாக இருக்கலாம், உளநலம் குன்றியவராய் இருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிப்பது மரணித்த உடலைத் தூற்றுவதற்கு சமனாகும்)
வார்த்தைகள் அன்பின் வெளிப்பாடாய் வெளிவரட்டும்./பொறுமையுடன் நிதானம் மிகுந்ததாய் வெளிவரட்டும்.
மீளப்பெறமுடியாத வார்த்தைகளை பலதடவை யோசித்து வெளியிடுவோம்.
நன்றி.
-✍ஹட்டன் பிரவீனா.
0 Comments