மரணத்தேடல்(உங்கள் பாஷையில் தற்கொலை)
*நான் தற்கொலையை இங்கு மரணத்தேடல் என அறிமுகம் செய்கிறேன்.
சில அரைவேக்காடுகள், அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தெரியாத படித்த மற்றும் படிக்காத முட்டாள்கள்தான் ஒருவனின் மரணத்தேடலுக்குப் (தற்கொலைக்கு) பின்பு, "இவன் தைரியசாலி என்று நினைத்தேன்", "இவன் வாழத்தெரியாத கோழை", "இவன் இப்படி செய்வானென நான் நினைக்கவில்லை" என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு திரிகின்றன. எத்தனையோ தற்கொலைச் சம்பவங்களைப் பார்க்கிறோம், கேள்வியுறுகிறோம். முதலாவதாக நாம் அதனை விமர்சிக்க எத்தனிக்கக் கூடாது. இதனூடு நான் தற்கொலை சரி என்று கூற முற்படவில்லை; மரணத்தின் பின் ஒருவனை விமர்சிக்க நமக்கு எந்த தகுதியுமில்லை; உரிமையுமில்லை; அவசியமுமில்லை எனத்தான் கூறவிழைகிறேன்.
ஒருவன் மரணத்தைத் தேடிக்கொள்கிறான் என்றால் அது அவனது உளத்தாக்கம். "இவனுக்கெல்லாம் என்ன குறை, இவன் தைரியசாலி என நினைத்தேன்" என்று பிதற்றுபவர்கள் தன்னை தைரியசாலி எனக் காட்டிக் கொள்வதற்காக வெளி வேடம் போடும் நாடகக் கதாபாத்திரங்கள். இவர்கள் மனிதரைப் புரிந்துகொள்ள ஒருபோதும் தயாரில்லாதவர்கள். எல்லோருமே எல்லா விடயத்திலும் தைரியமாக இருப்பதில்லை; குறைந்தது ஏதோ ஒரு விடயத்தில் சரி மனமுடைந்து நொந்துதான் வாழ்வைக் கடந்து கொண்டிருக்கிறோம்.
தயவு செய்து ஒருவனின் உணர்ச்சியில் உங்கள் பிதற்றலைத் தூக்கி நிறுத்தாதீர்கள். "வாழத்தெரியாத கோழை" என்று ஒருவனைப் பார்த்து நகைப்பவர்கள் ஒருபோதும் தைரியசாலி ஆகிவிட முடியாது. இப்படி சொல்லித்திரிபவர்கள் அனைவரும் அந்த உணர்வை ஒருபோதும் வாழ்வில் சந்தித்திராதவர்கள் தான். தெரிந்தே தான் ஒன்று கேட்கிறேன் தற்கொலை செய்துகொள்பவனை விட ஒரு தைரியசாலி இவ்வுலகில் உண்டோ.....??? (தற்கொலை செய்பவர்கள் தைரியம் இல்லாமல் அதை செய்துவிட முடியாது; அதேசமயம் நீங்கள் தைரியசாலிகள்- தற்கொலை செய்து கொள்ளுங்கள் என நான் பெருமைபாராட்டவோ, துணை போகவோ இல்லை.)
சட்டத்தின் முன்தான் தற்கொலைக்கு முயற்சிப்பவன் குற்றவாளி. சட்டத்திற்கு அப்பாற்பட்டு நிஜமான குற்றவாளி நாம்தான். என்னைப் பொறுத்தவரை ஒருவன் தற்கொலை செய்துகொள்ள சமூகம் தான் மூல காரணம். தற்கொலையை உயர்த்திக்கூறவில்லை நான்; உணர்வுகளையே உயர்வாகக் கருதுகிறேன்.
எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம், நான் வாழத்தயாரில்லை என்று ஏதோ ஒரு ஆழமான காரணத்தில்தான் ஒருவன் மரணிக்கிறான். அவனது வாழ்க்கை, அவனது வேதனை, அவனது அநுபவம்- அவன் முற்றுப்புள்ளி வைத்துக் கொள்கிறான். மனதைத் தொட்டு சொல்லுங்கள், இறந்தவன் உயிரோடு இருந்தால் நாம் தாங்கிவிடப்போகிறோமா? "தற்கொலை எதற்கும் தீர்வில்லை" என எல்லாம் அறிந்ததுபோல் முலாம் பூசுகிற மனிதர்கள் இறப்பவரின் பிரச்சினைக்கு இறக்கும் முன்பே தீர்வு கொடுத்தீர்களா? எனக்கு யாருமே இல்லை அல்லது யாருமே வேண்டாம் என்றுதானே ஒருவன் மரணத்தைத் தேடிக்கொள்கிறான்...??? அந்த சந்தர்ப்பத்தையும், உணர்வையும் நாம் புரிந்துகொண்டு இழப்புக்களை அமைதியாய்க் கடந்து செல்வதே உசிதமானது.
ஆக, உயிரோடு இருக்கும்போது மனிதர்களை நேசியுங்கள். பிறர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அன்பிற்கு மதிப்பளியுங்கள். ஒருவரது பிரச்சினைகளைக் காது கொடுத்து கேளுங்கள். ஆறுதலாக கைகோருங்கள். இவைதான் தற்கொலைகளை இழிவளவாக்குமே தவிர நமது விமர்சனங்களல்ல.
தயவுசெய்து,
இறந்த பின் விமர்சிக்காதீர்கள்- அதைவிடக் கேவலம் வேறொன்றில்லை.
நன்றி.
-✍ஹட்டன் பிரவீனா.
0 Comments