Subscribe Us

header ads

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ




நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ....
ஆம் வீழ்வேன். 
வீழாமல் இருக்க நானென்ன வானமா, நிலவா, புவியா? வால் நட்சத்திரம் சரிந்து வீழும் போது, பெரும்பாறை உருண்டு வீழும் போது, வானவில்லும் வளைந்து வீழும் போது, வீழாமல்  தான் நின்றிடவே நான் யாரோ...
நீங்கள்தான் யாரோ...? 

வீழ்வது தவறல்ல; வீழ்ந்து கிடப்பதுதான் தவறு. 
ஆக, நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.... 
ஆம் வீழ்வேன், ஆனால் எழுந்தே தீருவேன். 

நமது வெற்றி நேர்க்கோட்டில் உயரப்போவதில்லை. யாருமே வீழாமல் எழும்பிவிடப்போவதில்லை. வீழ்ந்தால்தான் எழுச்சி. எவனொருவன் இழப்புகளை ஏற்க தயாராக இருக்கிறானோ அவன் வீழ்ந்தாலும் எழுவான், இழப்புகளை ஏற்க மறுப்பவன் வீழ்ந்தே கிடப்பான். நான் இங்கு கூறும் "வீழுதல்" உடல் சார் வீழ்ச்சியல்ல மாறாக, உளம்சார் வீழ்ச்சியாகும். 

நாம் அன்றாடம் பல்வேறு இழப்புகளை சந்திக்கிறோம். உடைமைகளை இழக்கிறோம், உற்ற உயிரை இழக்கிறோம், உறவுகளை இழக்கிறோம். இழக்காதிருக்க நம் வாழ்க்கை ஒன்றும் அக்ஷய பாத்திரம் அல்லவே..... ஆகவே, எதையும் இழக்க எச்சந்தர்ப்பத்திலும் தயாராகிவிடுவோம். இழப்புகளை பழகிக் கொண்டால் அடுத்த அடியை உயரம் நோக்கி  வைக்கலாம். வீழ்ந்து எழுவதற்கான காலம் ஆளாளுக்கு வேறுபடும். அது அவரவர் மனோபாவம், நெகிழ்வுத்தன்மை, உள ஆரோக்கியம் போன்ற உளம்சார் அம்சங்களைப் பொறுத்தது. ஆனால், வீழ்ந்தவர் ஒருநாள் சுயமுயற்சியில் எழுந்தே தீர வேண்டும். இவ்வுலகில் நம்மைத் தூக்கிலிட பல வேடிக்கை மனிதர்கள் இருக்கிறார்களே தவிர தூக்கிவிட எவரும் இல்லை. 
 
ஆகவே, உன்னை நீ நம்பு.
இழப்புகளை ஏற்கப் பழகு.
அடிபட அடிபட நீ உறுதியாவாய் என்பதை மனதில் நிறுத்தி செயற்படு . 
வீழ்ந்தாலும் எழுவோம். விதைகளாய் மறுபிறவி கொள்வோம்.

நன்றி. 
 
-✍ஹட்டன் பிரவீனா.

Post a Comment

0 Comments