Subscribe Us

header ads

புறக்கணிப்புகளை வரவேற்போம்



புறக்கணிப்புகளை வரவேற்போம்; தரத்திற்கு வலு சேர்ப்போம்.

       இங்கு யதார்த்தம் என்பது என்னவென்றால் அனைவருக்கும் சமமாக போடப்பட்ட பாதைகளில் அனைவராலும் சமமாக நடக்கவோ, ஓடவோ முடிவதில்லை என்பதாகும். பாதைகளின் மத்தியில் செவ்வனே பயணிக்க திறமையும் தகுதியும் சமமாக பார்க்கப்படுவதில்லை என்பதே நிதர்சனம், ஆனால் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள இன்றைய சமூகம் தயாராக இல்லை. இங்கு இருக்கைகள் சமனாகப் போடப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட இருக்கைகள் சிலருக்காக மட்டுமே தான் காத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பொதுவில், இருக்கும் எல்லாமே ஏதோ ஒரு வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் நியாயத்தை சொல்லக்கூட தனிப்பட்ட தகுதிகளும் சில அடிவருடல்களும் அவசியப்படுகிறது. நீதி எனும் தராசுத்தட்டு ஒரு தரப்பிற்கு சார்பாகவே உயர்ந்து நிற்கிறது. ஒரு தரப்பினரை மட்டுமே கருத்திற்கொண்டு மற்றைய தரப்பை மனசாட்சியின்றி புறக்கணிக்கிறது இச்சமூகம். புறக்கணிப்பு என்பது ஒருவரின் தரத்தை இழக்கச் செய்வதாக இந்த ஏகாதிபத்திய சமூகம் பெருமாப்பு கொள்ளலாம், ஆனால் அந்த புறக்கணிப்பு அபரிமித வளர்ச்சிக்கு வித்திடும் என்று அவர்களின் அறியாமைக்கு எட்டாமலேயே இருக்கிறது.  

      இன்றைய புறக்கணிப்புக்களுக்கான பிரதான வகிபங்கு பணமாகும். குறிப்பாகக் கூறினால் பணமெனும் வெற்றுத்தாள்களாகும். தகுதி என்ற பதத்தை தீர்மானிப்பது இந்த பணத்தின் பெறுமதியேயாகும். மனிதன் உருவாக்கிய காகிதத்திற்கு மனிதனே உயிர் கொடுத்து அடிமைப்பட்டுக் கிடக்கின்றான். கல்விக்கு பணம், ஆரோக்கியத்திற்கு பணம், அழகுக்கு பணம், திருமண பந்தத்திற்கு பணம், குழந்தைபேறிற்கு பணம்,  இறுதியில் அன்பையே விலை பேசி விற்கக்கூடிய சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பணத்தை மட்டுமே குறியாகக்கொண்டு செயற்படும் இந்த சமூக மாந்தர்கள் மந்தைகளைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்தும் வேட்டை நாய்களாக தொழினுட்பமும் சமூக ஊடகங்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அவை அவ்வப்போது குரைத்தாலும், கடித்தாலும் உணர்ச்சியற்ற கூட்டம் பின்னால் ஓடிக்கொண்டே தான் இருக்கப் போகிறது. அதுவரை இந்த புறக்கணிப்புகள் சர்வசாதாரணமாகவே திகழப்போகின்றன.

      பணம் மட்டும் தோற்றுவாய் இல்லை. பணத்தையும் தாண்டி நோக்குவோமாயின் ஒரு நோயாளி நோயினால் புறக்கணிக்கப்படுகிறான், ஒரு ஆசிரியன் மாணவரின் பெறுபேற்றால் புறக்கணிக்கப்படுகிறான், ஒரு ஊடகவியலாளன் பிரதேசத்தினால் புறக்கணிக்கப்படுகிறான், ஒரு விவசாயி ஏழ்மையால் புறக்கணிக்கப்படுகிறான். 
"புறக்கணிப்பு என்பது கடவுளின் அன்புக்கு எதிரானது" என்கிறார் திருத்தந்தை பிரான்ஸிஸ். புறக்கணிப்பு கலாசாரத்திலிருந்து நம் இதயங்கள் விடுபட இறைவனை மன்றாடுவோம் என்கிறார் அவர். ஆகவே,எல்லோரும் நமது வாழ்நாளில் ஏதோவோரு இடத்தில் புறக்கணிப்பிற்கு உள்ளாகிக்கொண்டுதான் இருக்கிறோம். அது கல்விப் புறக்கணிப்பாக இருக்கலாம், மதப் புறக்கணிப்பாக இருக்கலாம், மொழிப் புறக்கணிப்பாக இருக்கலாம், ஏன் காதல் புறக்கணிப்பாகக்கூட இருக்கலாம். அன்றாடம்  மனிதன் மனங்களைப் புறக்கணித்துக் கொண்டுதான் இருக்கிறான். "பொதுவாக இயற்பியலில் பெண்களுக்கு போதியளவு அங்கீகாரம் கிடைத்ததில்லை, இயற்பியல் துறை ஆண்களுக்காக மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது" என்கிறார் விஞ்ஞானி செர்ன். ஆக, இங்கு பாலியல் புறக்கணிப்பின் சுவடுகளும் இருக்கின்றன என்றால் புறக்கணிப்பின் சர்வாதிகாரத்தை நாம் நிச்சயம் உணர வேண்டும். 

      புறக்கணிப்பின் வலி மிக ஆழமானது, ஆனால் அது வலிமை மிக்கது. நாம் எதற்கும் சளைத்தவர்களல்ல. இந்த சமூகம் நம்மை புறக்கணிக்கலாம். நம் மனம் ஒருபோதும் நம்மை புறக்கணித்துவிடக்கூடாது.  யதார்த்தத்தை உளமாரவுணர்ந்த நாம் அதனை சமூகத்திற்கு புரியவைக்கிறேனென மீண்டும் மீண்டும் புறக்கணிப்புகளுக்கு ஆளாகாமல் யதார்த்தத்தின் பாதையை வலுவாக்க இயலும். ஒவ்வொரு புறக்கணிப்பின் போதும் துவண்டு விடாமல் தைரியமாய் எழுந்து வாழ்ந்து காட்டுவோமாயின் இந்த ஏகாதிபத்திய சமூகத்தின் சர்வாதிகாரத்தை உடைத்தெறிய எம்மால் இயலும். வீறு கொண்டு எழுவோம்; புறக்கணிப்புகளால் சரித்திரம் படைப்போம்.

-✍ஹட்டன் பிரவீனா.

Post a Comment

0 Comments