Subscribe Us

header ads

அரசு என்றால் என்ன?




அரசு பற்றிய அறிமுகம்

அரசு என்பது அரசியலின் மையக்கருவாக விளங்கும் ஒரு எண்ணக்கருவாகும். இவ் அரசு சமூகத்தினால் தமது எதிர்கால நலன்கள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை பேணுவதற்காகவும் அச்சுறுத்தல்களிலிருந்து விடுபடுவதற்காகவும் உருவாக்கப்பட்டதாகும். ஆங்கிலத்தில் State  என்றழைக்கப்படும். இவ் எண்ணக்கரு இலத்தீன் சொல்லாகிய  Status எனும் சொல்லிலிருந்து தோற்றம் பெற்றது. இது ஆணை பிறப்பித்தல்/கட்டுப்படுத்தல் என்று பொருள்படும்.

அரசு என்பது,

  • மானசீகமான ஒன்றாகும்.
  • ஸ்பரிசிக்க முடியாததும், கட்புலனாகாததுமாகும்.
  • நிரந்தர ஒன்றாகும்.
  • முழுமையான ஒன்றாகும்.
  • வரையறுக்கப்பட்ட ஓர் எல்லைப்புறத்தினில் வாழும் மக்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அரசியல் சமூகமாகும்.
  • பொதுநலன்களுக்காக செயற்படுதல் என்ற நாமத்துடன் கூடிய விசேட அரசியல் நிறுவனங்களின் தொகுதியைக் கொண்டுள்ளது.
  • சட்டத்தை ஆக்குவதற்கும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குமான சட்ட ரீதியான அதிகாரத்தையுடையதாகும்.
  • மக்களின் கூட்டு விருப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முகவராகும்.
  • இறைமை என்ற உயர் அரசியல் தாபனமாகும்.
  • தாராளவாதிகளால் ஒரு பொதுச்சமூகத் தாபனமாகவும் சமதர்மவாதிகளால் வர்க்கக்கருவியாகவும் நோக்கப்படுகிறது.
  • நிலம், மக்கள், அரசாங்கம், இறைமை ஆகிய அடிப்படைக்கூறுகளைக் கொண்டதாகும்.
  • சர்வதேச அரசியலின் பிரதான செயற்பாட்டாளராகும்.
  • தோற்றத்திலும் இயல்பிலும் வேறுபட்டதென வேறுபட்ட சிந்தனாவாதக் குழுவினர்களால் நோக்கப்படுகிறது.


அரசு பற்றிய அரசியல் அறிஞர்களுடைய கருத்துக்கள்

  • அரிஸ்டோட்டில்
"குடும்பம் குலமாகி அவற்றிலிருந்து தோற்றம் பெற்ற சமூகங்களினால் உருவாக்கப்பட்டதே அரசு ஆகும். அது மனித நல்வாழ்க்கைக்காக தொடர்ந்தும் நிலைத்திருக்கும்"

  • மெகர்
"அரசன் ஒருவனின் நிபந்தனைகளையும் ஆணையையும் பிரதிபலிக்கின்ற அடிப்படையே அரசு ஆகும்"

  • கார்ணர்
"நிச்சயிக்கப்பட்ட நிலப்பரப்பில் ஒன்றுகூடுகின்ற மக்கள் கூட்டத்தினர் தமக்கான சட்டவாக்கத்திற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்கிறபோது தோற்றம்பெறும் எண்ணக்கருவே அரசாகும்"

  • கெஹெல்
"மனித உள்ளுணர்வின் வெளிப்பாடே அரசாகும்"

  • வூட்றோ வில்சன்
"குறித்தொதுக்கப்பட்ட மக்கள் தொகையினர் ஒன்றுகூடுகிறபோது அவர்களினால் ஏற்படுத்தப்படுகிற கட்டமைப்பே அரசு ஆகும்"

  • சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளர்கள்
"சமூக ஒப்பந்தமொன்றின் விளைவே அரசாகும்"

  • தெய்வீக உரிமை கோட்பாட்டாளர்கள்
"அரசு என்பது இறைவனின் படைப்பாகும்"

  • மாக்சிசவாதிகள்
"அரசு என்பது வர்க்க நலன் பேணும் கருவியாகும்.

  • பாசிசவாதிகள்
"தனிமனித வழிபாட்டின் வெளிப்பாடே அரசாகும்"

  • தாராளவாதிகள்
"அரசு என்பது சமூக நலண்பேண் சங்கமாகும்"

-✍ஹட்டன் பிரவீனா.

 

Post a Comment

0 Comments