மீரா-சதீஷ்
மீராவும் சதீஷும் பத்துவருட காதலர்கள். காதலர்கள் என்பதை விட கணவன்-மனைவி என்றே கூறி விடலாம். அன்யோன்யமான அந்த அன்புக்கு அளவோ எல்லையற்றது. ஒருநாள் சதீஷ் மீராவை சந்திக்க அவளது ஊரிற்கு சென்றிருந்தான். வெகுநாள் கடந்து அந்த சந்திப்பு அரங்கேற இருந்தது. அவன் வந்தால் இவளும் தனது வீட்டில் ஏதேனும் பொய்க்காரணங்கள் கூறிவிட்டு அவனைப் பார்க்க செல்லுவது வழக்கம். அப்படித்தான் அன்றும் தான் வந்துவிட்டதாக சதீஷிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரவே இவளும் பரபரப்பாக ஒரு பொய்யைத் தயார் செய்தாள்.
ஒருவாறாக வீட்டிலிருந்து வெளியே கிளம்பி விட்டாள். இன்று சதீஷைக் காணப்போகும் ஆவலில் அவளது கால்கள் துள்ளிக்குதித்தன. சதீஷ் வரக்கூறிய வங்கியை மின்னல் வேகத்தில் வந்தடைந்தாள். பத்துபேர் கொண்ட வரிசையில் மூன்றாவதாக சதீஷ் நின்று கொண்டிருந்தான் ஏ.டி.எம் வாசலில். அவனைக் கண்ட மீராவுக்கு அடிவயிற்றிலிருந்து மின்சாரம் வெட்டி தலைக்கேறியது போலிருந்தது. அவன் பணமெடுத்துக் கொண்டு திரும்பும் வரையில் கூட அவளுக்குப் பொறுமையில்லை. ஒவ்வொருவராய் நகர நகர இவளது கால்கள் தரையில் படாமல் தள்ளாடின. சதீஷ் பணமெடுக்க உள்ளே சென்றான். அவன் இன்னும் மீராவைக் காணவில்லை. இவள் ஒரு ஓரமாக மறைந்து கொண்டாள். சதீஷ் வெளியே வந்து மீரா இன்னும் வரவில்லையா எனத் தேட ஆரம்பித்த கணம் ஓடி வந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவனது கண்களும் கண்ணீரால் ஈரம் கண்டது. மீராவின் கன்னங்களில் தன் கைகளை வைத்து அவள் முகத்தை உயர்த்தி நெற்றியில் முத்தமிட அவள் தலைக்கேறிய மின்வெட்டு சர்ர்ர்ரென்று கீழிறங்கி பாதம் தொட கண்களில் வழிந்த கண்ணீர் மண்ணைத் தொட்டது.
தெரிந்தவர் கண்ணில் அகப்பட்டுவிட்டால் வீட்டில் பிரச்சினை ஆகிவிடும் என்ற பயம் இருவர் மனதையும் குடைய கைகோர்த்த வண்ணம் மறைந்து மறைந்து நடக்கலாயினர். காதல் தராத தைரியத்தை வேறு எதுதான் தந்துவிடும். இருவரும் மரங்கள் இருந்த சாலையோரமாய் மனதில் பல்பட்ட ஆசை வெள்ளங்களுடன் நடத்துகொண்டிருந்தனர். பின்பு சிறு தொலைவில் சென்று சிறிது நேரம் காதல் பகிரலாம் எனக்கருதி சதீஷ் தனது தொலைபேசியினூடு சொகுசு வண்டி ஒன்றை தான் இருந்த இடத்திற்கு வரவழைத்தான். மீரா சதீஷின் வலக்கையினைப் பற்றிப்பிடித்தவாறு அவனது தோளில் சாய்ந்து நின்று கொண்டிருக்க ஐந்து நிமிடத்தில் வண்டி வந்துவிட்டது. வண்டியை ஓட்டி வந்த சாரதி ஒரு பெண். இருவரும் ஏறி அமர வண்டி புறப்பட்டது.
வெகுநாட்களுக்கு பின்னான அந்த சந்திப்பு காதல் சாரத்தை வெகுவாக சுமந்திருந்தது. மீரா சதீஷின் முகத்தைப் பார்த்த வண்ணம் ஆனந்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். சதீஷ் அவளது கண்ணீரை தன் கையால் துடைத்து விட்டான். அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது.
"மீரா இடம் வந்துருச்சி, எறங்கு"
"சரிடா"
மீரா ஒருபுறமாக வண்டியின் கதவைத் திறந்து வெளியில் இறங்கினாள். இறங்கிய வேகத்திற்கு பின்னால் திரும்பினாள். சதீஷைக் காணவில்லை, வண்டியையும் காணவில்லை. பதறிப்போன மீராவுக்கு என்னவென்று எதுவுமே புரியவில்லை.
"வண்டி எங்கே?"
"சதீஷ் இறங்கினானா, இல்லையா?"
" என்னை ஏமாற்றி விளையாடுகிறானோ?"
என்றெல்லாம் பல கேள்விகள் மின்னல் வேகத்தில் ஓட அதே இடத்தில் பிரம்மை பிடித்தவள் போல் தலையில் கைவத்த வண்ணம் கீழே அமர்ந்தவள் கதறி அழுதாள். சதீஷ் வருவான், வருவான் என வீதியைப்பார்த்தவாறு கத்திக் குமுறிக் கொண்டிருந்தாள். சதீஷ் வரவே இல்லை.
என்ன நடந்தது...? எதுவுமே புரியவில்லை.
கைக்குழந்தையைத் தொலைத்தவள் போல வீதி முழுக்க ஓடித்திரிந்தாள். ஒருகட்டத்தில் அவள் பைத்தியம் பிடித்தவள் போலானாள். எதிர்பாராத விதமாக கடைக்கு சென்றிருந்த மீராவின் தாய் அவ்வழியே வர மீராவும் அவள் கண்ணில் அகப்பட்டு விட்டாள். தலைமயிரைப் பிய்த்தவளாய் தனது மகளை வீதியில் அந்த கோலத்தில் கண்ட தாய் பதறிப்போய் ஓடிவந்தாள்...
"மீரா மீரா..." மீராவின் தோள்களைப்பிடித்து குலுக்கினாள். மீரா எதுவுமே பேசவில்லை. பித்துப்பிடித்தவள் போல் நின்றாள்.
வெகுநேர போராட்டத்தின் பின் தனது தாயினைக் கட்டிப்பிடித்து கதறி விட்டு நடந்ததைக் கூறினாள். மீராவின் தாய்க்கு சதீஷ் யாரெனத் தெரியாது.
"சதீஷ் யாரு? நீ அவரோட எங்க போன மீரா?"
மீராவிடம் இருந்து அழுகையைத்தவிர பதிலொன்றும் வரவில்லை. சதீஷ் யாரென்ற மிகப்பெரிய குழப்பத்துடன்
"சரி அழாத போலீஸுக்கு போவோம்"
என மீராவையும் அழைத்துக்கொண்டு போலிஸ் ஸ்டேஷனை அடைந்தாள் மீராவின் அம்மா. இருவரும் போலிஸில் முறைப்பாட்டுக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு புறப்பட்டனர். மீரா எல்லாம் இழந்தவளாய் உடம்பில் சக்தியின்றி எந்த உணர்வுமே இன்றி நடக்க ஆரம்பித்தாள். அவள் வேகத்தை ஈடு செய்ய முடியாத தாய் இடைவெளி விட்டு மீராவைப் பின்தொடர்ந்தாள். மீரா கால்போன போக்கில் போக அவள் வண்டியில் இருந்து இறங்கிய அதே இடத்தில் ஒரு வெள்ளைத்துணியால் முழுவதுமாக மூடிக் கட்டப்பட்ட ஒரு உடலைக் கண்டாள். கண்டவள் வந்த வழியே வீச்சென்று கத்திக்கொண்டு அலண்டடித்து வந்தவழியே ஓடினாள். தன் பின்னால் வந்துக்கொண்டிருந்த தாயையும் காணவில்லை. தூரத்தில் இருந்து வேகமாய் வந்த வண்டி அவளைக் கடக்கையில் மெதுவாக வேகம் குறைந்து வாகனசாரதி மீராவைப் பார்த்து சிரிக்க, வண்டி வேகமாய் அவளைக் கடந்தது.
இருநிமிடம் கழித்துதான் மீரா உணர்ந்தாள், சதீஷுடன் அவள் வந்த வண்டிதான் அது என்றும் சிரித்து விட்டு சென்றது அதே பெண்சாரதி என்றும். வண்டியின் பின்னே தலைத்தெறித்தவள் போல மீண்டும் அதே பாதையில் ஓட சற்று முன்பு அவள் அங்கு கண்ட உடல் அவ்விடம் இல்லை.
"சதீஷ்................"
என்று வீரிட்டுக் கத்தியவள் படுக்கையிலிருந்து எழுந்தாள்.
என்று வீரிட்டுக் கத்தியவள் படுக்கையிலிருந்து எழுந்தாள்.
அன்றொருநாள் அந்தி சாயும் பொழுது. ராத்திரி முழுக்க சதீஷ் தன்னை ஏசியதால் அழுது புலம்பி தூக்கமிழந்த மீராவின் கண்கள் இலேசாக ஓய்வெடுக்க ஆயத்தமாயின. தனது காதல் நினைவுகளையும் ராத்திரி காதலன் சதீஷுடன் ஏற்பட்ட சண்டையையும் மனதில் ஓடவிட்டுக் கொண்டு அப்படியே கண்ணயர்ந்தவள்தான். நிகழ்ந்தவை அனைத்தையும் கனவென்று அவளால் ஏற்க முடியவில்லை. பதறிப்போனவள் உயிரில்லாத பிணம்போல் ஆனாள். அருகில் கிடந்த தொலைபேசியை எடுத்து சதீஷுக்கு அழைப்பை ஏற்படுத்தினாள். அவளது நடுக்கமான வலக்கையை இடக்கையால் பிடித்துக் கொண்டாள். கண்ணீர் தாரை தாரையாக வழிய அழைப்பு போய்க்கொண்டிருந்தது. சதீஷ் அழைப்பை ஏற்கவில்லை. விடாது அழைத்தாள். அச்சமயம் அவளது இதயம் கழன்று நெருப்பில் விழுந்தது போலிருந்தது. அந்த கனவு எதற்கான அறிகுறி என்றறியாது தன்னிலை மறந்த அவள் பத்து அழைப்புகளை ஏற்படுத்தியும் சதீஷ் எடுக்கவில்லை. அடுத்த அழைப்பு நிறுத்தப்பட்டது. குறுஞ்செய்தி வந்தது.
"ஏன் கோல் பண்ற...?"
"சதீஷ்..... (அழுதாள்)
"ஒனக்கு சொல்லிருக்கேன்தானேடி எனக்கு கோல் பண்ணாதன்னு."
"சதீஷ் எங்க இருக்க? நல்லா இருக்கியா"
"ஒனக்கு அறிவு இருக்காடி. எதுக்குடி வேணானு சொல்லியும் கோல் பண்ற. நா வீட்டுல இருக்கேன்டி; அம்மா பாத்துட்டாங்க"
"சதீஷ் சொல்றத கொஞ்சம் கேளு"
"ஒரு மயிரும் சொல்லாதடி. ஒனக்கு ஒருதடவ சொன்னா வெளங்காது என... இன்னொருக்க இப்டி கோல் பண்ணுனனா என்னோட வாழமாட்ட. அன்னையோட எல்லாம் முடிஞ்சிருச்சினு நெனச்சிக்கோ..."
"ஐயோ சதீஷ்.. ப்ளீஸ். வேணும்னு கோல் பண்ணலடா. நல்லா இருக்கியா? ஒடம்புக்கு ஒன்னும் இல்லையே....?"
பயத்துடனும் பதறலுடனும் அழுதாள் மீரா.
"எனக்கென்னடி உயிரோடத்தான் இருக்கேன். மூடிக்கிட்டு போடி, இனிமே எங்கிட்ட இந்த வேல வச்சிக்காத"
வாயடைத்தவளாய் உணர்வுகளைக் கொன்று ஸ்தம்பித்துப் போனாள் மீரா.
கூறவிழைவது: உங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்து உங்களை ஆராதிக்கும் ஒருவரை புரிந்து கொள்ளாவிட்டாலும் சந்தர்ப்ப சூழ்நிலை புரிந்தாவது நடந்து கொள்ளுங்கள். அவர்களின் மனதை மேலும் புண்ணாக்கி உணர்வுகளைக் கொன்று முடமாக்கி விடாதீர்கள்!
யாவும் கற்பனையே!
-✍ஹட்டன் பிரவீனா.
0 Comments