Subscribe Us

header ads

காற்றோடு காற்றாக...





உனக்காய் வழிந்து வழிந்து மதிப்பிழந்த ரத்தமோ உறைகல்லாய் மாறிவிடும்...
உனக்காய் சுவாசித்த நுரையீரல்கள் ஓய்வு பெற்றுக் கொள்ளும்....
பட்டாடையும் மலர்மாலையும் என்னை அலங்கரிக்க உன் தாலிக்காக ஏங்கிக் கிடப்பேன்....
உன் கைகோர்த்து வாழமுடியாத நான் என் கைகோர்த்து மண்ணில் புதையுண்டு போவேன்...

என் மரணவாசம் உன்னை விட்டகலாதபடி அனுப்பி வைப்பேன்....
என் இறுதி மூச்சு காதலோடு காற்றில் கலந்து உன்னை வந்தடையும்...
என் கண்ணீர்த்துளிகள் கடலுடன் கலந்து உன் காலடி சேரும்...
என் ஆன்மா தீராத துன்பத்துடன் உன் பின்னே அலைந்திடும்...

என் அழுகுரல் உன் செவி வழி புகுந்து வான் அடைந்து அலறும்...
என் ஆசை உன் ஆடைக்குள் புகுந்து நிரந்தர குடிகொள்ளும்...
என்னைத்தேடி கைகளை காற்றில் நீட்டி அலைவாய்....
என்னை ஸ்பரிசிக்க முடியாமல் நிலம் தொட்டு கதறுவாய்...

என் அன்பிழந்து அலையும் தருணம் உன் தவறறிவாய்...
உன் வார்த்தைகள் தீயாய் பொசுக்க என்னுயிரும் பொசுங்கிடும்....
உன் வாக்குகளின் தவறால் நாவறுக்க புறப்படுவாய்...
உயிரில்லை எனும்போதும் என் உயிரிழுத்த உன் வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்...

என் ஆவியுடன் தீராக் காதலும் புயலாய் சுற்றியடிக்கும்...
ஏமாற்றங்களும் பொய்களும் வாழ்வின் நிம்மதியழித்து முடமாக்கும்....
என் நினைவுகளை எறியவும் முடியாமல் சுமக்கவும் முடியாமல் தத்தளித்துப் போவாய்...
என் கல்லறை தேடிய உன் பயணம் நெடுநாள் தொடர்ந்திடும்...

என் மூச்சுக் காற்றின் வெப்பம் தாங்காது துடிதுடிப்பாய்....
என்னைக் காற்றில் தொலைத்த நீ காற்றில் தேடி அலைவாய்...
கனவெல்லாம் வந்து போவேன் இரவெல்லாம் உன் மடி கிடப்பேன்...
என் உடல் தேவை உன்னுடலை எழுப்பிய போதும் தீர்க்க முடியா முடமாக நிற்பாய்...

குளிக்கும் பொழுதுகளிலெல்லாம் நீர்த்துளிகளில் என் கண்ணீர்த்துளிகளைக் காண்பாய்....
உன் வார்த்தைகளுக்கு அகராதியில் அர்த்தம் தேடிடுவாய்...
என் மார்பின் சூட்டிற்கு ஏங்கித் தவிப்பாய்...
உன் எண்ணங்கள் கண்டு பச்சோந்திகள் பயந்தோடிடும்...
என்னை உயிருடன் அலைய வைத்த நீ உயிரற்று அலைந்திடுவாய்...

என்னுருவம் பிடிக்க முயற்சித்து காற்றில் கபடி ஆடுவாய்....
உன் நிழலில் என்னைத் தேடி கதிரவனை நொந்து கொள்வாய்...
பொய்ப் பித்தலாட்டங்களில் என்னை அழித்ததற்காய் மனநல மருத்துவமனை தேடிடுவாய்...
உன் காலிலுள்ள செருப்புக்கு நிகராய் கூட என்னை பொருட்படுத்தாத நீ வெற்றுக்கால்களுடன் தேடித் திரிவாய்...

காதலெனும் பெயரில் என்னை முற்றும் அழித்த நீ பிணம் தேடி நகர்வாய்...
உன் கட்டில் உன்னை வெறித்துப் பார்க்கும்...
சிட்டுக்குருவிகள் கூட உன் இடத்தில் வாழ எத்தனிக்காது...
உன் ஒவ்வொரு  அசைவும் என் பெயர்கூறி கதறிடும்...

என் கொஞ்சல்களும் கெஞ்சல்களும் நீங்காத பேரிரைச்சலாய் உன்னுடன் பயணிக்கும்...
புழுக்கள் என்னுடல் தின்று உன் இடம் நிரப்பிடும்....
உன் தேவைகள் தீர்க்க யாராலும் முடியாத போது என் நினைவு உனையழித்திடும்...
மண்ணள்ளி வதனம் தடவ காற்றில் முத்தமிடுவேன் உன் முன் நெற்றி மீதிலே...
உன் நினைவுகளில் நான் ஊசலாடிக் கொண்டிருப்பேன்...

என் அலைவு காலம் கணித்து மணற்கடிகாரமாய் அசைந்திடுவாய்...
என்னை அலையவிட்ட நினைவுகள் உன் இதயக்கூட்டில் ஆணி அறைந்திடும்...
எனக்கொரு கருவைத்தர என் கருப்பை தேடி அலைகையில் அது மண்ணோடு கலந்திருக்கும்...
உருவாகாத நம் பிள்ளை அப்பா....என்று கதறி அழுதிடும்....

என் பெண்மையை பாதியில் சாகடித்துப் புதைத்த நீ உன் ஆண்மையிழந்து முடங்கிடுவாய்....
பெண்களைக் கண்டால் என் முகம் தெரிந்திடவே
தேடித்தேடி அலைந்து களைத்துப் போவாய்...
சவரம் செய்யாத உன் முடி கூட நீ ஆணா என்று உனைக் குத்தும்...

உன் கைபேசி என் இதயத்துடிப்பை ஒலியெழுப்பும்....
அளவு கடந்த காதலோடும் காமத்தோடும் என் பயணம் முற்றும்!
உன்னைப் பார்க்கத் தவித்து ஏங்கிய போது முகம் காட்டாத நீ என் முகம் தொலைத்து விடுவாய்!
எனையிழந்த தபுதாரனாய் வாழ்ந்து கழித்திடுவாய்...

-✍ஹட்டன் பிரவீனா

Post a Comment

0 Comments