Subscribe Us

header ads

மனித உறவுகள்

மனித உறவுகள் பட்டுப்போன மரங்கள்
******************************************



காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து கொள்ளும் மரங்கள் தான் மனித உறவுகளும் என்று கூறிவிட்டால் சரி என ஏற்றுக்கொண்டு ஒருசாராரும் பிழை என வாதாடிக்கொண்டு ஒருசாராரும் வந்து நிற்பதென்னவோ நிதர்சனம் தான். இங்கு என்ன வெளிச்சம் என்றால் அடிபட்டவன் சரி என்பான்; அடித்தவன் பிழை என்பான். அது ஒருபுறம் கிடக்க, அன்பை மட்டுமே ஆணிவேராகக் கொண்டு வாழும் உறவுகளும் இருக்கத்தான் செய்கின்றன, அதிலெந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

    இந்த மரங்களை எடுத்துக்கொண்டால் அதுதான் அந்த மனித உறவுகளைத்தான் குறிப்பிடுகிறேன். சொந்த உணர்ச்சியற்ற உடல்களை இறந்த மரங்களுக்கு ஒப்பிடுவதில் எனக்கொரு ஆத்ம திருப்தி. வெளியில் சிரித்து உள்ளுக்குள் பற்றி எரியும் கேவலமான உறவுகள் போலியான ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு நம்முடனேயே பயணிப்பதைக் காட்டிலும் தனிமையில் வாழ்ந்து விடுவது எவ்வளவு பேரானந்தமென நானறிவேன். அப்பா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, மச்சினன், கொழுந்தன், அண்ணன், தம்பி, மகன், பேரன் என ஆயிரம் உறவுகள் இருந்த போதும் ஒருவன் அநாதைப்பிணமாகக் கிடக்கிறான் என்றால் உறவுகளால் என்ன பயன்?

உறவுகள் என்றாலே எனக்கு நினைவில் வருவது,

"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு"

எனும் மூதுரைப் பாடல் தான்.
கொக்கு, நாரை போன்ற பறவைகள் எல்லாம் குளத்தில் நீர் உள்ள வரை அந்நீரில் உள்ள மீனுக்காகக் குளத்தைத் தேடி வரும்; அக்குளத்தையே சுற்றிச் சுற்றி வரும்; ஆனால் குளம் வற்றிவிடுமானால், அவ்வளவு தான்; குளத்தை இவை எட்டியும் பாரா! ஆனால் குளத்தில் நீர் இருந்தாலும், வற்றினாலும் அதில் உள்ள தாவரங்களான ஆம்பலும், கொட்டியும் அங்கேயே குளத்தோடு இருந்து தாமும் வற்றினாலும் வற்றுமே ஒழிய, குளத்தை விட்டகலா!

     இது போலத்தான் மனிதர்களும். நம்மிடம் பணமும், செல்வ செழிப்பும் இருக்கும்போது ஒட்டி உறவாடிவிட்டு அது இல்லை என்றானவுடன் நம்மை விட்டுவிட்டு பணம் இருப்பவருடன் போய் இணைந்து கொள்பவர்கள் அறுநீர்ப்பறவைகள் ஆவர். அவர்களைப்போன்ற மனித உறவுகளை நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். கொட்டியும் ஆம்பலும் போன்ற உறவுகளை நாம்  தேடிக்கொள்வது மட்டுமல்லாது நாமும் பிறரின் துன்பத்தில் உடனிருக்கும் உறவாக இருத்தல் வேண்டும். அறுநீர்ப்பறவைகளுக்கு ஏமாளியாக நாம் ஒருபோதும் இருந்துவிடக்கூடாது.

    பிடுங்கித்தின்னும் உறவுகள் அட்டைகளுக்கு சமானம். இந்த சுயநலம் மிகு அட்டைகள் தன் குடும்பம் தன் வாழ்க்கை எனத் தனித்து வாழ்ந்துவிடுவதே சிறந்தது.  ஒருவரைப்பற்றி ஒருவர் தவறான எண்ணங்களை விதைப்பது மட்டுமல்லாமல் அதற்கு நீரூற்றி வளர்த்து உடனிருந்து குழிபறிக்கும் ஈனச் செயல் செய்துகொண்டிருக்கும் சமூகத்தில் நாம் போலி உறவுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும்போது வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    உறவுக்காரன் ஒருவனின் வளர்ச்சி கண்டு பொறாமைத் தீயைக் கக்கும் கேவலமான உலகம்தான் இது. பிறர் விடயங்களில் தலையை இடுவதும் அவதூறு பேசுவதும் அடுத்தவனைக் கெடுப்பதும் இந்த பட்டுப்போன மரங்களின் முழுநேர தொழில். அகமொன்று வைத்து புறமொன்று நடிப்பது மனித உறவுகளுக்கே கைவந்த கலை. பணம் இருக்கும் பக்கம் அலைவதில் இவர்களை மிஞ்சிட யாருமில்லை. மிருகங்களிடம் இருக்கும் அன்பும் அரவணைப்பும் கூட சொந்த உறவுகளிடம் இல்லை எனும்போது மனிதர்களைவிட மிருகங்கள் உயர்ந்தவைதான் என்பதில் ஐயமில்லை.

-✍ஹட்டன் பிரவீீீீனா.

Post a Comment

0 Comments