15 November 2019
கொண்டாட்டமாய் கடந்து வந்த பிறந்தநாட்கள் கடந்த சில வருடங்களில் சாதாரண நாட்களாகவே என்னைக் கடந்து விட்டன. இன்றைய பிறந்தநாள் சற்றே மாற்றம் கொண்டதுதான் எனினும் இதுவும் சாதாரண நாளாகவே கடந்துவிடப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. மனிதர்களின் இருட்டுப்போர்வைக்குள் சிக்குண்ட நான் இறக்கைகள் முளைத்து பறக்க முயற்சி செய்தாலும் மீண்டும் மீண்டும் வெட்டி வீழ்த்தப்படுகிறேன் என்பதே நிதர்சனம். நடுநிசியின் கும்மிருட்டில் யாரையும் காண விருப்பின்றி அமைதியான குளிர்க்காற்றில் உறைந்து போய் கிடக்கின்றேன்; வாழ்த்துக்கள் வேண்டாம், நான் பிறந்தது வாழ்த்துதற்குரிய விடயமல்ல என மீண்டும் மீண்டும் கூறிக் கொள்கிறேன்.
ஆயிரம் வார்த்தைகள் கேட்டிருக்கிறேன், கோபத்தின் உச்சமாய் சுடர்விட்டிருக்கிறேன், அனைவராலும் புறம் ஒதுக்கப்பட்டிருக்கிறேன், அன்பு காட்டியோரால் முதுகில் குத்தப்பட்டிருக்கிறேன், யாருக்கும் பிடிக்காதவளாகவே வாழ்நாளைக் கடத்தியிருக்கிறேன், வாழ்க்கையை வெறுத்து நிம்மதி தொலைத்து அலைந்திருக்கிறேன். நானொன்றும் நல்லவள் கிடையாதுதான், ஆனால் வாழ்க்கை ஏன் என்னை அளவுக்குமீறி பாடாய்ப்படுத்துகிறது என்று இன்றுவரை யோசிக்கிறேன், பதிலில்லை. உறவுகளின் திறத்தை அறிந்து கொண்டேன், நட்பின் ஏமாற்றங்களை உணர்ந்து கொண்டேன், அன்பின் அடாவடித்தனத்தை அளந்து கொண்டேன், பின்பு என்னை நானே தூக்கி நிறுத்திக் கொண்டேன். என்மனதில் நான் விதைத்த விதை மெதுவாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. அநுபவங்களை நிதமும் உரமாய் இடுகிறேன். ஒருநாள் பெரிய விருட்சமாகத்தான் போகிறது, காத்திருக்கிறேன்.
தூக்கி எறிந்த இதயங்களையும்
தூசு தட்டி பாதுகாத்திருந்தேன்
என்றோ ஒருநாள் என் துடிப்பறிந்து
துடிதுடிக்கும் என்றேதான்
துடித்துவிட்டதில் பெரும் மகிழ்ச்சி!
தூசு தட்டி பாதுகாத்திருந்தேன்
என்றோ ஒருநாள் என் துடிப்பறிந்து
துடிதுடிக்கும் என்றேதான்
துடித்துவிட்டதில் பெரும் மகிழ்ச்சி!
ஆனால் நான் இன்னும் எனக்காய் வாழ ஆரம்பிக்கவில்லை. சமூகம் எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழவிடாமல் செய்ய சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது, அடுத்தவருக்காய் என் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். கௌரவம் என்ற பெயரில் நரகத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன். என்னைப் புரிந்துகொள்ள எவருமில்லை தான், ஆனாலும் வருத்தமில்லை, இனி நான் அதை எதிர்ப்பார்க்கப் போவதில்லை!
எனது முயற்சி நின்றுவிடப்போவதில்லை, என் போராட்டத்தில் நான் தோற்றுவிடப் போவதுமில்லை.
எனது முயற்சி நின்றுவிடப்போவதில்லை, என் போராட்டத்தில் நான் தோற்றுவிடப் போவதுமில்லை.
எதற்கிந்த பிறவி என
எனை நானே வெறுத்திருக்கிறேன்
பி(ர/ற)விக்கு அர்த்தமொன்று
கைமேலே கிடைத்திருக்கிறது
பிரபஞ்சத்திற்கு மனமார்ந்து ஒரு
நன்றி சொல்லிக் கொள்கிறேன்!
எனை நானே வெறுத்திருக்கிறேன்
பி(ர/ற)விக்கு அர்த்தமொன்று
கைமேலே கிடைத்திருக்கிறது
பிரபஞ்சத்திற்கு மனமார்ந்து ஒரு
நன்றி சொல்லிக் கொள்கிறேன்!
எதற்கும் கலங்காதவள் சிலகாலமாய் கண்ணீரை வசமாக்கிக் கொண்டதென்னவோ உண்மைதான். கண்ணீர் உணர்த்திய பாடம் சந்தோஷம் உணர்த்திவிடவில்லை என்பதுவும் உண்மைதான். வாழ்க்கையை நம்பி நம்பி ஏமாந்து போன வரலாறெல்லாம் மறைக்கப்பட்டு வருகிறதே தவிர மறக்கப்பட முடியாதவை. எதற்காகவும் நடிக்கத் தெரியாதவள் நான், நான் நானாக இருந்துவிட்டால் மோசமானவள், பிடிவாதக்காரி என்ற பட்டங்களையே சுமந்து கொள்கிறேன். பிறரைப் புரிந்து கொள்ளாத சடமாகவே நான் கருதப்படுகிறேன். ஒன்று மட்டும் கூறிக் கொள்கிறேன், நான் பிறரைப் புரிந்து கொண்ட ஒரே காரணத்தால்தான் என்னை நானே வெறுக்க ஆரம்பித்தேன்.
பெரிதும் மாறியிருக்கிறேன், வாழ்வில் வளர்ந்திருக்கிறேன். சுழலுகின்ற பூமி எனக்காய் பாதை விரித்திருக்கிறது. என்னைக் கண்டு குரைத்த நாய்கள் சற்றே அடங்கியிருக்கின்றன; அடக்குவதற்கான அங்குசம் பெற்றிருக்கிறேன். என் வளர்ச்சி கண்டு வானுயரப்பறக்கும் பறவைகள் சற்று தாழ்ந்திருக்கின்றன. நதிக்கரைப் புற்களும் எனக்காய் தலை வணங்கியிருக்கின்றன. என்னைப் புறக்கணித்தவர்கள் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள். என் எண்ணம் வெற்றியடைந்திருக்கிறது. என் சாதனை எழ ஆரம்பித்திருக்கிறது. வாழ்க்கை எனக்காய் வர சம்மதம் தெரிவித்திருக்கிறது. தடைகள் தாண்டி ஓடப்போகிறேன். உடலிலும் மனதிலும் சக்தி போதாதென்ற போதிலும் நம்பிக்கைக்கு மாத்திரம் குறைவில்லை என்று உரத்தே கூறுகிறேன்.
அழிந்து போகும் பணத்திற்காக அன்பினை விலைபேசிவிட மாட்டேன். அன்பு காட்டி ஒருவரையும் ஏமாற்றிவிட விடமாட்டேன். பிறர் எனக்கு செய்ததெதையும் நான் யாருக்கும் செய்துவிட மாட்டேன். யாருக்கும் நம்பிக்கை துரோகம் இழைத்துவிட மாட்டேன். கற்குவியலுக்கிடையில்தான் சந்தோஷம் தேடிக் கொண்டிருக்கிறேன். கல்லறை மீது பூத்திட்ட பூவின் மீதான ரசனையை ஒத்தது என் வாழ்க்கை! காத்திருப்பு பழகியதுதான், இன்னமும் காத்திருக்கிறேன், இனியும் காத்திருப்பேன் மாற்றத்திற்காக....!
அழகான வாழ்க்கைதேடி தொடரட்டும்
என் வாழ்க்கைப் பயணம்.....
என் வாழ்க்கைப் பயணம்.....
0 Comments