சூரியக்கதிர்கள் முகத்தில் விழுந்து கண்கூச திடுக்கிட்டு விழித்தாள் ஜானு. தலையணைக்கடியில் துணைக்குக்கிடந்த கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தாள்; நேரம் பத்து ஐந்து. இரவெல்லாம் தொலைபேசித் தொடுதிரையுடன் முட்டிமோதியவளுக்கு பத்துமணி என்பது தாமதமல்ல. சோம்பல் முறித்து எழுந்து கண்களைக் கசக்கியபடி வாட்ஸ்ஆப்புக்குள் நுழைந்தாள்.
"குட் மோனிங் மி"
"மெசேஜ் பாத்தவுடன கோல் பண்ணு"
உள்ளம் ஆர்ப்பரித்து உடனே அழைப்பு விடுத்தாள் அன்புக்காதலன் அர்ஜூனுக்கு.
ஹலோ என்னடா சொல்லு
"என்ன பண்ற மி?"
"நான் இன்னிக்கி உன்ன பாக்க வாரேன், கிளம்பி வா உடனே"
கட்டிலில் கிடந்தவளுக்கு கனவா, நனவா என்றெதுவுமே புரியவில்லை. நான்கு வருட பிரிவின் பின் முதல் சந்திப்புக்கான அழைப்பு அது. மனதில் ஆயிரம் கோபங்களும் பத்தாயிரம் சண்டைகளும் இருந்தபோதும் ஒற்றைவார்த்தையில் நெகிழ்ந்து உடல் தடதடத்துப்போன அவள் "சரி" என்று குரல் இழுத்தாள். வேகவேகமாக எழுந்து பல்லைத்துலக்கியும் துலக்காமலும் தண்ணீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டு ஆடைத்தெரிவுக்கு பெட்டியை இழுத்தாள். நேர்த்தியான உடைகள் இரண்டும் காய்ந்தும் காயாமலும் கொடியில் கிடக்க அடியில் கிடந்த ஒரு உடையை எடுத்து உடுத்திக்கொண்டாள். உடையைப் பார்த்து எடைபோடமாட்டான் என்று தன்னைத்தானே தேற்றியும் கொண்டாள். முதல்நாள் குளித்து சிக்குப்பட்டுக் கிடந்த ஓரடிக் கூந்தலை எண்ணெய் தெளித்து பரபரவென வாரிக்கொண்டு கண்ணாடியும் பாராமல் உடனே கிளம்பிவிட்டாள்.
மனதில் பதகளிப்புடன் காத்திருந்து ஏறி அமர்ந்தாள் பேரூந்தில். விரல்கள் சொடுக்கின் மூலம் ஏதோ கூறவிழைந்தன. பழைய சந்திப்புக்களை மனது அசைபோட ஆரம்பித்தது. உதடு விழுங்கும் முத்தங்களும் உடம்பு உராயும் அணைப்புக்களும் சாளரக் காற்றில் கண்களை ஈரமாக்கிக் கொண்டிருந்தன. மற்ற நாட்களில் ஏவுகணை வேகத்தில் பயணிக்கும் பேரூந்து கூட அன்று புஸ்வாணமாய் போவது போலிருந்தது அவளுக்கு. அருகிலிருந்தவனின் காமப்பார்வை கூட அவளின் கண்ணுக்கு எட்டவில்லை. அர்ஜூன் கூறிய தரிப்பிடத்தில் இறங்கி நின்றாள். அவளது கால்களோ அவளையறியாமல் கோலமிட முகம் சிவந்துபோனாள். அங்கேயே காத்திருந்தாள். அர்ஜூன் வரும் தோரணையைத் தனக்குத்தானே கற்பனை செய்துகொண்டாள்.
பள்ளிக்காலத்தில் பையனாக பார்த்துப்பழகிய பிஞ்சுமுகத்தை திடீரென மீசை, தாடியோடு இளைஞனாகப் பார்க்கப்போவதில் ஒரு வெட்கச்சிரிப்பு இதழ்களை வருடியது. சொல்லியும் கோளாமல் அவன் வைத்திருக்கும் திமிர்பிடித்த பிடிவாதத் தாடியைக் கண்டால் என்னாகுமோ என்ற எண்ணப்பெருக்கு அவள் மார்பைத்துளைத்து உள்ளிறங்கியது. அவன் கறுப்பு நிற மேலாடையில் தான் வருவான் என மனம் பலதடவை அடித்துக்கூறியது. சுமார் இருபது கிலோ எடை அதிகரிப்பில் ஒரு மாமிச மலை வந்து தன்னைத்தூக்கிக்கொண்டு விண்ணில் பறப்பதுபோல் கற்பனை வெள்ளத்தில் ஆழ்ந்தாள். நேரம் செல்ல செல்ல அவளது படபடப்பு அதிகமாகி இதயம் இரட்டைத்துடிப்பானது.
அருகில் வீதியோரமாய் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த யாசகப்பெண்ணைப் பார்த்தவுடன் அவளது அத்தனைக்கனவும் நொடிப்பொழுதில் வெற்றிடமாகிப்போனது. அக்குழந்தை ஒரு ஏமாற்றப்பட்ட காதலின் விளைவாகக்கூட இருக்கலாமென எண்ணினாள். ஆனால் பலபிரிவுகள் ஏற்பட்டிருந்த போதிலும் தன் காதலில் சிறிதும் மனந்தளராத ஜானு தன்னை எப்போதும் பாதுகாப்பாய் அரவணைக்கும் அர்ஜூனை எண்ணி உளம்பூரித்துப் போய் சற்றே நிமிர்ந்தாள், அந்த மாமிச மலை தனது கற்பனைத் தோரணைப்படியே கள்ளச்சிரிப்புடன் தன்னைநோக்கி வந்துகொண்டிருந்தது. அருகில் நெருங்கினால் அழுவதா, சிரிப்பதா என்ற நிலைப்பாடு கூடத் தெரியாமல் பதற்றமாகிப்போனாள். நெருங்கிவந்த அவன் ஜானுவின் இடைமடிப்பில் கையிட்டு அணைத்தபடி நடக்கலாயினான். அவளும் அவனது கையை இறுகப் பற்றிக்கொண்டாள், "கண்ணே கனியே உனைக்கைவிடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே"; என்ற பாடல் அசையோடு.
கைப்பிடித்து பாதுகாப்பாய் கூட்டிச்சென்ற அவன் ஒருநாளும் தன்னைக் கைவிடமாட்டான் என நம்பிக்கைப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள் ஜானு. கடற்கரை ஓரமாய் வெகுநேரம் நான்கு கால்கள் நடந்துகொண்டிருக்க முகத்தில் பூரிப்பும் ஆனந்தமும் அந்த அலையோடு அலையாக அமைதியாக அசைந்து கொண்டிருக்க வார்த்தைகள் செயலிழந்து போயின. உரசி உரசிச்சென்ற உரசலில் இருவர் மனதிலும் தீப்பற்றிக்கொண்டது. தொலைதூர நடைப்பயணத்தின் பின்னும் பசியெடுக்கவில்லை, பலவருட பட்டினி தீர்ந்துபோனதால்! கடற்கரை மணலில் காற்று இசைபாட அமர்ந்திருந்தனர்.
"என்ன மி பேசு"
"என்ன பேச....."(வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டாள்)
பசிமறந்த மூன்று மணித்தியாலங்களில் பழைய கசப்பான நினைவுகளை ஞாபகமூட்டாது இனிதே அரங்கேறியது புதுக்காதல். அவனது மன்னிப்புக்கள் இவளுக்கு அவசியமற்ற குப்பையாய்த் தோன்றியது. காற்றில் தொலைத்திருந்த உதடுவிழுங்கும் முத்தம் மீண்டும் தன்னை அடைந்ததில் பேரானந்தம் கொண்டாள் ஜானு. ஒருபோதும் அவனை இழந்துவிடக்கூடாதென்ற பயமும் ஆசையும் உடம்பெல்லாம் இழையோடியது. இடைவருடல்கள் இருதயத்துக்கு நீரூற்ற காதல் செடி பூக்க ஆரம்பித்தது. பூப்பறிக்க காலம் வரும் என்ற ஆவலுடன் கடத்தல் பார்வை பகிர்ந்தான் அர்ஜூன். இருவரது மன இரைச்சலும் கடலின் இரைச்சலுடன் கலந்து அலைகளாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
அவர்கள் வாழ்வில் இந்த சந்திப்பு காதலை பலப்படுத்தும் ஓர் இடைவருடல்.....
(பழையன கழிந்து புதியன புகு)
கூறவிழைவது:
பழையகதைகள் மரணவேதனை தந்திருந்தபோதும் மீள் அசைபோடாது இறந்தகாலத்தில் இறந்ததாக விட்டுவிட்டால் புதுவாழ்க்கை பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டதாக இனிதாய்ப்பூக்கும்.
0 Comments