Subscribe Us

header ads

போய் வாரேன்


🛇🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🛇
#பகிடிவதைக்கோரம்

போய் வாரேன்....



உச்சி வெயிலுல 
உச்சந்தல உசிர் குடிக்க
முதுகுல கொழுந்துக்கூட
அங்க இங்க சாய சாய 
கோண மலையெல்லாம் 
கோணிக்கோணி அவ நடந்து
கங்காணி பேச்செல்லாம் 
காது  நனைய வாங்கிக்கிட்டு
ஏங்கி ஏங்கி கொழுந்து கிள்ளி
வெறகடுப்ப ஊதி ஊதி 
புகையெல்லாம் மூச்சிழுக்க
புஸ்தகமும் வாங்கிக்குடுத்து 
போய் வாடான்னு அனுப்பி வெச்சா! 

அவளோட கஸ்டத்துக்கு 
நான் ஏன்தான் பொறந்தேனோ
தலையிலயும் அடிச்சிக்குவேன் 
நல்லாவே படிக்கனும்னு!
காஞ்சிப்போன ரொட்டித்துண்டு 
கால் வயிறு நெறையாது
ஆனாலும் அத தந்த 
அவ கைய நெனச்சா மனசெல்லாம் நெறஞ்சிப்போகும்!
முக்கி முக்கி படிச்சிப்புட்டேன்
ஏ எல்லும் பாஸ் பண்ணிட்டே(ன்)
இதத்தவிர எங்கம்மாவுக்கு நா(ன்) 
வேறொன்னும் பண்ணிடல! 

என்னையுந்தாங் கூப்புட்டாங்க 
தேயில மலையில கொழுந்து கிள்ள
பொத்தி பொத்தி வளத்த அம்மா 
கங்காணிய ஏசிப்புட்டா! 
அவளோட வீராப்பு 
நான் நல்லா வந்துடனும்
கெஞ்சிக் கெஞ்சி பிச்ச எடுத்து 
ராப்பகலா கொழுந்து ஆஞ்சி 
கெம்பஸுக்கும் அனுப்பி வெச்சா! 
ஆயிரங்கண்ணு சட்டையோட
நானும் வாசலடி போகையில 
வாடிப்போன எங்கம்மா கண்ணீரு 
என் சட்டையத்தான் நனைச்சதுங்க! 

சீனியருன்னு சொன்னாங்க
வணக்கமும் வெச்சிப்புட்டே(ன்)
முழுக்கை சட்ட போடனுமாம்
சப்பாத்து வேற வேணுமாமே...
ஒரு வேள கஞ்சி குடிச்சி 
மூனு வேள சோறு போட்டா
அவ கிட்ட போயி எப்புடி கேப்பேன் 
சப்பாத்தும் சட்டையும் வாங்கித்தான்னு! 
மணிக்கணக்கா நிக்கனுமாம்
ஃபோன் பண்ணி பேசனுமாம்
ஃபோனெல்லாம் நா(ன்) பாத்ததில்ல 
என்ன செய்வேன் பாதையில... 
கதறி கதறி அழுதாலும் 
அவ மடி இல்ல பக்கத்துல 
தல சாஞ்சி நாந்தூங்க!

கண்ட நேரம் கூப்புட்றாங்க 
டான்ஸும் ஆட சொல்லுறாங்க
சொந்த தம்பியா இருந்தா 
நிர்வாணமா பாப்பாங்களா...
அப்பாவ பாத்ததில்ல
ரொம்ப வருசமா தூங்குறாரு
தேயிலத்தூறுக்கு அடியிலத்தா(ன்)
என்ன போயி தூய தமிழ் பேசுடான்னா 
நா(ன்) என்ன வள்ளுவரோட புள்ளையாங்க?

சிரேஷ்ட மாணவர்ன்னு சொல்லிக்கிறிங்க
மரியாதய நா(ன்) தந்துப்புட்டே(ன்)
தயவு பண்ணி சொல்லிடாதிங்க 
காசு மட்டும் தந்துட்டு போன்னு!   
மண்ணு அள்ளி விளையாண்டே(ன்) 
சோறு போடும் தேயில மலையில
என்ன பாத்துக்கிட்ட தேவதைக்கு
நா(ன்) வாங்கித்தரனும் ஒரு பட்டு சேல!

என்னப்போல வந்தவ ஒருத்தி 
தினமும் அழுகுறா தேம்பித்தேம்பி
சுடிதார் வாங்க அவகிட்டயும்
காசில்லயாம் என்னப்பண்ண!
சிங்களவன் நெனச்சிக்கிட்டான் 
இதுதான் தமிழ் கலாசாரமுன்னு
எவன்டா சேத்தான் சுடிதார 
நம்ம ஊரு கலாசாரத்துல!

நாட்டுல ஆயிரத்தெட்டு பிரச்சினங்க
அரசியலமைப்பே பொறண்டு கெடக்குது
படிக்க வந்த சிறுசுக்கெல்லாம்
எதுக்கு இந்த வீண் வேல?
எங்கம்மா கெடக்குறா மடுவத்துல
என்ன நெனெச்சி நொந்துக்கிட்டு
நா(ன்) வரல விளாட்டுக்கு
நானும் எங்கயாவது வேலைக்கி போறே(ன்) 
எங்கம்மாவுக்கு ஒரு சேல வாங்கனும்! 

போய் வாரேன்....

-✍ஹட்டன் பிரவீனா.

Post a Comment

0 Comments