Subscribe Us

header ads

உனைக் கேட்கும் நினைவுகள் -கவிதை


            ☆வருவாயா வழித்துணையாய்...?



மனமோ கேட்டது
ஏன் அவன் போகிறானா?
முகத்தை திருப்பிக் கொண்டேன்...
கண்கள் கேட்டன
இனி அவன் இல்லையா?
கண்களை மூடிக்கொண்டேன்...
கைகள் கேட்டன
அவனைத் தொட மாட்டேனா?
கைகளைக் கட்டி போட்டேன்...
இதழ்கள் துடித்தன
இனி முத்தம் இல்லையா?
வாயை மூடிக்கொண்டேன்...

சாலைகள் கேட்டன
அவன் எங்கே போகிறான்?
சாலையை மூட முடியவில்லை...
மரங்கள் கேட்டன
அணைக்க அவன் இல்லையா?
மரத்தை கட்ட முடியவில்லை...
நமை நனைத்த மழை கேட்டது
அவன் நனைய மாட்டானா?
அழுகையை நிறுத்த முடியவில்லை...
நீ தந்த காகிதமும் கேட்டது
அவன் கையெழுத்து எங்கே?
கிழித்துப் போடவும் முடியவில்லை...

துணையாய் இருப்பேன் என்றாய்
துகளாய் காற்றில் பறந்தாய்
சல்லடை தேடினேன் பிடித்திட...
நீ நடந்த பாதைகள் இன்று
நான் நடந்திடும் சுடுகாடு
பிணமாய் திரிகிறேன் துடித்திட...
மனம் மட்டும் ஏனோ நித்தம்
கேட்டுத்திரிகிறது உன் முத்தம்
கண்களும் கண்ணீர் வடித்திட...
பெண்மை துடித்திடும் நினைவு
ஆகிவிட்டதோ வெறும் கனவு
மனமும் இல்லை நடித்திட...

சொல்லிச்சென்ற வார்த்தைகள்
குளிர்ச்சி தந்த தடம் மாறி
வெந்துத்தணிகிறது இப்போது...
பார்த்துச்சென்ற பார்வைகள்
சாரல் வீசிய சுவடழிந்து
அனலை எறிகிறது இப்போது...
துணை என இருந்த இருப்பு
வினை என நினைக்கும் அளவு
ஆவியழிகிறது இப்போது...
வாழ்க்கை துணையாய் இல்லாமல்
வழித்துணையாய் சரி வருவாயென
ஏங்கி ஏங்கி உயிர்க்கிறேன் இப்போது...

              https://youtu.be/EmezrMCJgas
          Like, Share, Comment & Subscribe

பிரவீனா-ஹட்டன்

Post a Comment

0 Comments