ஒரு கைம்பெண்(விதவை) எழுதுகிறாள்....🖎
அன்புக்கணவனே!
நீ என்னை விட்டு வெகுதூரம் நீங்கிச்சென்ற பின்பு,
♡என் மீதான சமூகத்தின் பார்வை மாறுபட்டுப் போனது.
♡அண்ணன், தம்பியாய், நண்பனாய் உபசாரம் செய்த உறவுகள் அறைக்கு அழைக்கின்றன.
♡தட்டிக் கேட்க யாருமில்லாத அநாதையென்று விரோதிகள் தலைவிரித்தாடுகிறார்கள்.
♡பேரூந்துப் பயணங்களில் காமத்தொடுகைகள் நீ இதுவரை காலமும் தந்திருந்த பாதுகாப்பின் இழப்பை உணரச் செய்கின்றன.
♡தொலைபேசி அழைப்புகள் கலவியின் முனகலாய் ஓலமிடுகின்றன.
♡சூரியன் மறைந்தபின் வீதியில் நடக்க பயமாய் இருக்கிறது.
♡பசியில் தவிக்கும்பொழுது நீ ஊட்டிய உணவின் உணர்ச்சிமிகு திருப்தி வாயடைத்துவிடுகிறது.
♡நோயென்று கட்டிலில் அயர்ந்தால் வயிற்று வலிக்கு நீ எண்ணெய் தடவிவிட்ட நெகிழ்ச்சி வாட்டுகிறது;
வாந்தி எடுத்தபோது கையேந்திய கோலம் கொல்கிறது;
என் உடை கழுவி; குளிப்பாட்டி தலைதுவட்டி மடியில் தூங்கவைத்த நினைவு மயக்குகிறது.
♡நம் குழந்தை மீதான கனவுளும் பெயர்த்தெரிவுகளும் காணாமல் போய்விட்டன.
♡என் படுக்கையில் தலையணை உன்னிடத்தை மீள் நிரப்பிக் கொண்டிருக்கிறது.
♡தூக்கத்தில் கனா கண்டு உன் பெயர் கூறி உளறி திடுக்கிட்டு விழிக்கும் போது உன் போல் கட்டியணைத்து நெஞ்சில் புதைத்து தூங்கவைக்க என் தலையணைக்குத் தெரியவில்லை.
♡வலைதளங்களில் காதலர்களின் மோகப்பகிர்வுகள் எனக்கு கடூழிய சிறை தண்டனை அளிக்கின்றன.
♡தேனாய் இனித்த உன் பாடல்கள் காதுகளில் நெருப்பை அள்ளியிறைக்கின்றன.
♡காமத்தீயில் உடல் துடித்து தவிக்கும் போது புதுமணத் தம்பதிகள் மீது தீராத பொறாமை வருகிறது.
♡மறுமணம் புரிய வந்த மணமகனின் பார்வையும் சிரிப்பும் இதயத்தைக் குத்திக் கிழிக்கின்றன.
♡இத்தனை வருட உன்னுடனான வாழ்க்கையில் உன்னையே மறு உருவில் பார்க்கத் திராணி இல்லாத நான் இன்னொருவனை மனதில் ஏந்த துளியும் சக்தி இல்லாதவள்.
♡பன்றிகளும் தெருநாய்களும் கூத்தாடிக் குதூகலித்து மேய்ந்து செல்ல வாய்ப்பளித்து வேலியற்ற தோட்டமாய் எனை விட்டுச் சென்றுவிட்டாய்.
♡காலத்தின் பாதையில் கோலமிழந்து கைம்பெண்ணாய்க் கூட வாழ்ந்துவிடுகிறேன்; எவனோ ஒருவன் பிச்சையிடும் மறுவாழ்க்கை எனக்கு வேண்டாம்!
என் கள்வனே,
உன் இன்மை உணர்கிறேன்;
நீ இனி இல்லை என்றறிந்தும் உன்னைக் காதலிக்கிறேன்;
மறுபிறவி ஒன்று இருப்பின் உன் மகளாய்ப் பிறந்துவிட வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
உன் கண்மணி.
பதிவு:
-✍ஹட்டன் பிரவீனா.
0 Comments