உலகளாவிய சுற்றாடல் பிரச்சினைகள்
1.புவி வெப்பமடைதல்
2. ஓசோன்படை வறிதாக்கம்/தேய்வு
3. பாலைவனமாதல்
4. அமிலமழை
1.புவி வெப்பமடைதல்
புவி வெப்பமடைதல் என்பது வளிமண்டல சராசரி வெப்பநிலையானது படிப்படியாக அதிகரித்துச் செல்லுதல் ஆகும். புவி வெப்பமடைதலுக்கான பிரதான காரணியாக நாம் பச்சைவீட்டு விளைவினை(Green house effect) நோக்க முடியும். பச்சைவீட்டு வாயுக்களான காபனீரொட்சைட்டு, மெதேன், நைதரசனின் ஒட்சைட்டுகள், நீராவி, ஓசோன், குளோரோ புளோரோ காபன்கள், அலசன் கொண்ட சேதன சேர்வைகள் என்பவற்றால் புவியின் மேற்பரப்பை அடையும் வெப்பக்கதிர்வீசலின் ஒரு பகுதி மீண்டும் அண்டவெளிக்குள் செல்வது தடுக்கப்படுவதால் பச்சை வீட்டு விளைவு ஏற்படும்.
புவி வெப்பமடைதலின் பாதிப்புக்கள்
நீரின் வெப்பவிரிகையால் சமுத்திரக்கனவளவு அதிகரித்து மற்றும் பனிக்கட்டிப்பாறைகள் உருகி கடல் மட்டம் படிப்படியாக கூடும்.
- விவசாயம் பாதிப்படையும்.
- மழைவீழ்ச்சிக்கோலம் மாற்றமடையும்.
- வரட்சி கூடும்; காட்டுத்தீ பரவும்.
- நீர்ப்பற்றாக்குறை ஏற்படும்.
- உயிரினங்களின் அழிவு ஏற்படும்.
- கடலரிப்பு
- மீன்பிடிக் கொத்தொழில் பாதிப்படையும்.
- சுகாதாரப்பாதிப்பு.
- உயிரினப் பல்வகைமை குறையும்.
- வெப்பநோய்கள் ஏற்படும்.
2. ஓசோன்படை வறிதாக்கம்/தேய்வு
சூரியனிலிருந்து வரும் புறவூதாக்கதிர்கள் புவி மேற்பரப்பை அடையாத வண்ணம் தடுக்கின்ற வினைத்திறன் கூடிய தடையே படைமண்டல ஓசோன் படையாகும். புவியில் உயிர்களின் நிலவுகையில் இது பெரும் பங்கு வகிக்கிறது. ஓசோன்படை தேய்விற்கு பங்களிப்பு செய்யும் காரணிகளாக குளோரோ புளோரோ காபனையும் நைதரசனின் ஒட்சைட்டுகளையும் நோக்கலாம்.
ஓசோன்படை வறிதாக்கத்தின் பாதிப்புகள்
- ஒளித்தொகுப்பு பாதிப்படையும்.
- பயிர் விளைச்சல் குறையும்.
- சுகாதார பாதிப்பு: தோல்புற்றுநோய், கட்காசம்(Cataract) போன்றன ஏற்படும், நிர்ப்பீடனம் குறையும். விகாரம் ஏற்படும்.
3. பாலைவனமாதல்
வெப்பநிலை அதிகரிப்பால் தாவரங்கள் வளரக்கூடிய பிரதேசங்கள் தாவரங்கள் வளரமுடியாத பிரதேசங்களாக மாறுதலே பாலைவனமாதலாகும். காடழிப்பு, தரமற்ற நீர்ப்பாசனம், மிகைப்பயிர்ச்செய்கை, மிகைக்கால்நடை வளர்ப்பு, காலநிலை மாற்றங்கள் என்பன பாலைவனமாதலுக்கு பங்களிப்பு செய்கின்றன.
பாலைவனமாதலின் பாதிப்புகள்
- கால்நடைகள் எண்ணிக்கையில் குறைவடைதல்.
- பயிர்விளைச்சல் குறைவடைதல்.
- வரட்சி ஏற்படல்.
- பஞ்சம் உருவாதல்.
- பயிர்ச்செய்கைக்கான நிலப்பரப்பு குறைவடைதல்.
4. அமிலமழை
மழைநீரின் pH அளவு ஐந்து அல்லது ஐந்திற்கு குறையுமாயின் அது அமிலமழை ஆகும். அமிலமழைக்கு பங்களிப்பு செய்யும் காரணிகளாக நைதரசனின் ஒட்சைட்டுகள் மற்றும் கந்தகத்தின் ஒட்சைட்டுகளைக் காணலாம்.
அமிலமழையின் பாதிப்புகள்
- கட்டடங்கள் அரிப்புக்குள்ளாதல்.
- உலோக அரிப்பு.
- நீர்வாழ் அங்கிகளின் அழிவு.
- தாவர பாதிப்பு.
- மண்வாழ் அங்கிகள் குறைவடைதல்.
- ஒளித்தொகுப்பு குறைதல்.
- மண் வளம் குன்றுதல்.
-✍ஹட்டன் பிரவீனா.
0 Comments