எட்டுமணிப் பேரூந்திற்கு ஏழு மணியிலிருந்தே ஒற்றைக்கால் நாரையாய் பயணிகள் நிழற்குடைக்கு கீழே தவம் கிடந்த அவனது கண்களிலிருந்து எங்கேயோ பல மைல் தொலைவிற்கு ஈர்ப்பு விசை பயணித்துக் கொண்டிருந்ததில் அவனது கண்கள், இருட்டில் லாந்தர் விளக்கு போல் ஒளிமயமாய் மின்னிக்கொண்டிருந்தன. கலைந்த தலையை அவனது கைகள் நிமிடத்திற்கு பத்து தடவை மேலும் கலைத்துக்கொண்டிருக்க, கால்களோ கடும் வெயில் தரையில் தகிப்பது போல் ஓரிடம் கொள்ளாது துள்ளிக்கொண்டிருந்தன. அவனது தவிப்பும் துடிப்பும் கடிகாரத்திற்கு கேட்கவில்லை போலும்!
கனத்த பெட்டியாய் பல மனிதக்கூடுகளை ஏந்திக் கொண்டு நத்தையாய் நகர்ந்து வந்து சாரதியின் ஆவேச அழுத்தலில் "சர்....ர்ர்ர்ர்" என்று நின்றது பேரூந்து. இரையைக்கண்ட புலியைப் போல தாவிப்பாய்ந்தான் சந்தோஷ். காற்றுக்கே இடமில்லாத சனக்கூட்டத்துக்குள்ளே தனது உடலைக் குறுக்கிக்கொண்டு புகுந்து கொண்டான். அதற்கிடையில் பேரூந்து நகர ஆரம்பித்தது. பேரூந்து இழுத்த இழுப்பில் இறங்கி நடந்தே சென்றுவிடலாமோ என்ற எரிச்சல் அவனை நாலாப்புறமும் சுத்தி வளைக்க, பார்க்கும் முகங்களிளெல்லாம் ஸ்ருதியின் பார்வை ஒளி வீச தீயில் நீரூற்றியது போல சாந்தமானான். வியர்வை சட்டையை நனைத்தாலும் அவனது பரவசத்திற்கு மட்டும் அளவில்லாமல் இருந்தது.
இப்போது புரிகிறதா.... அவனது வேகத்திற்கு காரணம் என்னவென்று. ஆம், இவனது பயணம் ஸ்ருதியை நோக்கியதுதான். மல்லியப்பூ சந்தியில் ஒரு பெரியவர் இறங்கிக்கொள்ள ஒரு சீட்டு காலியானது. சந்தோஷ் அதனை எட்டிப்பிடிக்க ஆர்ப்பரித்த வேளையில் ஒரு பெண் வெகுநேரமாய் நின்றுக்கொண்டிருந்ததால் மனமுவந்து விட்டுக் கொடுத்தான். அவளோ ஸ்ருதியின் சாயலாகவே இருந்தாள். தரிப்பிடத்தில் பேருந்து வெகுநேரமாய் நின்றுக்கொண்டிருக்க சந்தோஷின் எண்ண அலைகளோ பின்னோக்கி நகர ஆரம்பித்தது.
மணி அடித்தது. பதினோராம் வகுப்பு அது. ஆசிரியர் வருவதைக்கண்டதும் வகுப்பு ஓர் நொடியில் அமைதியானது. தமிழ்ப்பாடம் என்றால் சந்தோஷுக்கு அளவில்லா அவா. அவ்வப்போது கவிதைகளும் வரைவான். வகுப்பில் அவனுக்கு "குட்டிக்கவிஞன்" என்பதுதான் பட்டம். ஸ்ருதியும் அதே வகுப்பு மாணவி தான். ஆசிரியர் தலைகீழாய் நின்று பாடம் புகட்டினாலும் சந்தோஷின் கண்கள் அவளைத்தான் உற்று நோக்கிக்கொண்டிருக்கும். அவனையும் அவனது காதலையும் கேலி செய்வதே நண்பர்களுக்கு வாடிக்கையானது.
அன்றைய தலைப்பு "பாரதி பாடல்கள்"
-"அக்கினிக் குஞ்சொன்றைக் கண்டேன்
அதை அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன். வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ..."
என மிக அழகாக சந்தத்துடன் கூறிமுடித்த ஆசிரியர் சந்தோஷ் வேறெங்கேயோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்துவிட்டார்.
"சந்தோஷ்"
அவன் காதில் விழவில்லை.
"சந்தோஷ் எழுந்திரு"
என்றார் சற்று கோபமாக...
"டேய்...சந்தோஷ், சார் கூப்புட்றாரு டா" என அருகில் அமர்ந்திருந்த கமல் சந்தோஷை தன் முழங்கையால் உந்தித்தள்ள தூக்கத்திலிருந்து விழித்தாற்போல திடுக்கிட்டு எழும்பி நின்றான் சந்தோஷ்.
"என்ன அங்க வேடிக்க (கை)? நான் இப்போ சொன்ன பாரதியார் கவிதைய சொல்லு" என ஆசிரியர் அதட்ட,
ஆப்பிழுத்த குரங்கைப்போல அங்குமிங்குமாக திருதிருவென முழித்தவன் ஸ்ருதியை பார்த்துவிட்டு ஏதோவொரு தைரியத்துடன் நிமிர்ந்து நின்றான்.
அவனது பார்வை ஒளி ஸ்ருதியின் கண்களைக்கூசச்செய்ய,
-"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன். அதை அங்கொரு மனதினில் பொந்திடை வைத்தேன். வெந்துத் தணிந்தது நெஞ்சு. காதல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ...." என்றான்.
மொத்த வகுப்பும் அவனைப் பார்த்து பல்லைக்காட்டிக் குலுங்க ஸ்ருதியின் முகம் மட்டும் அனலில் கன்றியது போலானது.
"ஹூம்ம்ம்... நீதான் புதுயுக பாரதியோ?" என ஆசிரியரும் கேலி செய்து சிரிக்க அதிபர் அழைத்ததாக அழைப்பு வரவும் அவசரமாக வகுப்பைவிட்டு வெளியேறினார்.
காதல் முதலில் அரங்கேறியது சந்தோஷுக்குத்தான் என்றாலும் ஸ்ருதிக்கும் அவன்மீது கொள்ளைப்பிரியம். ஆனால் அவள் அதனை எப்பொழுதுமே வெளிக்காட்டிக் கொண்டதில்லை. பாடசாலை வாழ்க்கை கானல் நீர் போல முடிவுக்கு வந்தது. அன்று கடைசிநாள். இன்று எப்படியாவது தன் காதலை அவளிடம் ஒப்புவித்துவிட வேண்டும் என உறுதியாக இருந்தான் சந்தோஷ். ஸ்ருதிக்கு புத்தகம் என்றால் பைத்தியம் என்று அவன் நன்கறிவான். அவளுக்காக தேடியலைந்து வைரமுத்துவின் "தண்ணீர் தேசம்" புத்தகத்தை வாங்கிய அவன் அதற்குள் தன் காதலுரைக்கும் கடிதமொன்றை வைத்து ஸ்ருதிக்குக் கொடுத்தான்.
தயங்கி தயங்கி அதனை வாங்கிக்கொண்ட ஸ்ருதி உள்ளே ஏதாவது இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்புடன் யாருக்கும் தெரியாமல் மறைத்து மறைத்து திறந்து பார்க்க, கடிதம் கண்டாள். அனைவருக்கும் இறுதியாய் அமைந்த நாள் இவர்களுக்கு மட்டும் ஆரம்பமாய் அமைந்தது ஆச்சரியம் தான்.
"என் பொம்மு ஸ்ருதிக்கு,
வைரமுத்துவின் வரிகளோடு என் முத்தான வரிகளையும் இணைக்கிறேன். பெரிதாய் எதுவும் பேச விரும்பவில்லை, காரணம் என் இதயவறையில் இருக்கும் நீ என்னைப்பற்றி அறிந்திருப்பாயென்ற நம்பிக்கை தான். உனக்கொரு தோழனாய், கணவனாய் காலம் முழுதும் வாழ ஆசைப்படுகிறேன். பதிலுக்காய் காத்திருக்கிறேன், என்றும் உனக்காய் காத்துமிருப்பேன்"
படித்து முடித்த ஸ்ருதி அலட்டாமல் ஏதோ எழுதித்திருப்பிக் கொடுத்தாள். பரபரப்பாக பிரித்த சந்தோஷ்,
"எனக்கு இதில் இஷ்டமில்லை, மன்னித்து விடு" என்று எழுதியிருந்த வரிகள் கண்டு ஒரு நொடியில் உயிரற்ற ஜடமானான்.
"என் குழந்தையாய் வாழடா..." என்ற அடுத்த வரி கண்டு கலங்கிய கண்கள் கண்ணீரால் ஈரமாக்கியது கடிதத்தை மட்டுமல்ல, ஸ்ருதியின் மனதையும் தான்.
அன்று முதல் அடுத்த மூன்று வருடங்களாக அவர்களின் காதல் காட்டில் கடும் மழை தான். மனதளவில் காதலித்த அவர்கள் உடலளவில் இணைந்து உயிரளவில் கலந்துவிட்டனர். காதலுக்கே காதல் சொல்லித்தரும் முதிர்ச்சி அவர்களுக்கு. இநதக்காதல் பாதையில் பெரும்பிளவை உண்டாக்க காலம் முயற்சித்ததேனோ என்பது இன்றுவரை அறியப்படாத உண்மை.
ஸ்ருதிக்கு அவளது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அதில் துமியளவும் ஈடுபாடில்லாத ஸ்ருதி தவிதவித்து துடிதுடித்தாள். எப்படியென்றாலும் இன்னொருவன் தன்னுடலைத்தொட அனுமதிக்கமாட்டாள் என்பது திண்ணம். சந்தோஷால் ஒன்றும் செய்யமுடியவில்லை. படிப்பு முடிந்து மூன்று வருடங்களில் நிரந்தர தொழில் எதுவுமின்றி ஸ்ருதியை மணந்துகொள்ள இயலாதென காலம் கடத்தினான். அவர்களது வசந்த கால காதல் பின்பு அழுவதும் ஆறுதல் கூறுவதுமென இலையுதிர்காலமாக மாற ஆரம்பித்தது.
"சந்தோஷ்... எனக்கு மாப்பிள்ள பார்த்து நிச்சயம் பண்ணிட்டாங்கடா...."
எனக்குமுறினாள் ஸ்ருதி.
திகைத்துப்போன சந்தோஷ், "என்ன சொல்ற? நிச்சயம் பண்ணிட்டாங்களா? என்ன செய்யப்போற?"
"என்ன சந்தோஷ், இப்டி கேக்குற! என்ன கூட்டிட்டு போடா. நாம கல்யாணம் பண்ணிக்கலாம். ப்ளீஸ்டா....."
"முடியாது ஸ்ருதி. இப்போ உன்ன கூட்டிட்டு போய் நான் எப்டி பாத்துக்குவேன்? நான் லைஃப்ல செட்டில் ஆகிட்டுத்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியும். நீ உன் வீட்டுல உண்மைய சொல்லி சமாளி"
"என்னடா சொல்ற! வீட்டுல சொல்ல முடியாதுடா. ப்ளீஸ் டா. என்ன கைவிட்டுறாத" என அவனது கால்களைப்பிடிதுக் கதறினாள். அவளால் அவனது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. காதல் கூடியவுடன் தன் மேல் அவன் வைத்திருந்த ஈர்ப்பு குறைந்ததுபோல் உணர்ந்தாள்.
ஸ்ருதிமீது அவன் கொண்டிருந்த அன்பு அவளைக் குடிசையில் இருத்தி கஷ்டப்படுத்த விரும்பவில்லை எனினும், சந்தோஷுடன் இருப்பதே போதும், மாடமாளிகை ஒன்றும் வேண்டாமென
அந்தப்பெண்ணின் மனம் கற்பைப் பற்றியே சிந்தித்தது.
"சந்தோஷ், கடைசியா கேக்குறேன், கூட்டிட்டு போக முடியுமா, முடியாதா?" என அவளது கோபமும் ஆதங்கமும் வெளிப்பட்டது. அவளது நச்சரிப்பு சந்தோஷுக்கு கோபத்தை மூட்டியது.
"இப்போ என்னால முடியாதுடி. நான் உனக்கு வேணும்னா வெயிட் பண்ணு, இல்லன்னா அவனையே கட்டிக்கிட்டு போய்த்தொல" என்று அவளது கைகளை உதறித்தள்ளிவிட்டு அவ்விடம் விட்டு நீங்கினான்.
அந்த ஒரு பேச்சு ஸ்ருதியின் மனதில் ஆழமாக ஆணியறைந்தது. எவனையும் கட்டமாட்டேன் என கயிற்றைக்கட்டிக் கொண்டு மாய்ந்தாள். அன்பான உயிரைத் தூக்கியெறிந்த சந்தோஷுக்கு அந்த உடல் தூக்கில் தொங்கிய செய்தி தான் எட்டியது.
அவனது எண்ண ஓட்டத்தைக் கலைக்குமாறு சாரதி தடுப்பை அழுத்த அவன் கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் கீழே வழிந்தது. பேரூந்து கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த அவனது விரல்களை ஒரு பாப்பாவின் பிஞ்சு விரல்கள் பற்றி இழுத்து அவனது கைக்குள்ளே ஒரு வெள்ளை ரோஜாப்பூவைத் திணித்தது. ஏதோ பிரமித்தவன் போல நின்றுகொண்டிருந்த சந்தோஷ் பழைய நிலைக்குத் திரும்பிப் பார்க்கையில் பாப்பாவைக் காணவில்லை, ரோஜா மணம் மட்டும் காற்றில் கலந்து அவன் மனதை வருடி பாதை காட்ட பேரூந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
அவனது கால்கள் ஒரு கல்லறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தன. காதல் ஸ்ருதி அவனது கல் அறையாய்க்கிடந்த மனதில் வாழ ஆசைப்பட்டு இப்போது இந்த கல்லறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இவனது கூட்டிற்குள் உயிரிருக்கும் வரை இவனது கால்கள் அந்த கல்லறையை நோக்கிப் பயணித்துக் கொண்டேதான் இருக்கும்....
-ஹட்டன் பிரவீனா
0 Comments