Subscribe Us

header ads

வாழ்த்துக்கள் வேண்டாம் - 2018



             ☆வாழ்த்துக்கள் வேண்டாம்! 
                       (15th of November)




"இன்று தான் நீ பிறந்த நாள்" என்று மேசையில் கிடக்கும் எனது பிறப்புச்சான்றிதழ் என்னைப் பார்த்து  சிரிக்கிறது. அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தத்தை நான் எடுத்துக் கொள்வது!
இன்றைய நாளில் நான் எதுவித சந்தோஷங்களையும் எதிர்ப்பார்க்கவில்லை, எதிர்ப்பார்ப்புகள் தந்த ஏமாற்றங்கள் மட்டுமே என்னுடன் இதுவரை பயணித்திருக்கின்றன என்பதனால். இதுவரை எதை சாதித்தேன் என மீண்டும் மீண்டும் யோசிக்கிறேன்; இன்று தான் புரிந்தது, நான் வாழ்வில் சாதிக்கவில்லை, இருபத்திரண்டு வருடங்களாக வாழ்வை சமாளித்துக் கொண்டிருக்கிறேன் என்று.

பிரவி பிரவி என்றெனை அழைத்த
உறவுகள் விட்டுச்சென்ற பின்னே
எதற்கிந்த பிறவி பிறவி என்று
என் மனமோ எனை வாட்டியது...

தூக்கியெறிந்த இதயங்களையும்
தூசு தட்டிப் பாதுகாக்கிறேன்
என்றோ ஒரு நாள் என் துடிப்பறிந்து
துடி துடிக்கும் என்றேதான்...

காதல் கதைக்கு கிடைக்கும் விமர்சனங்களும் பாராட்டுதல்களும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கை கதைக்கு கிடைக்குமா என்பது ஐயத்திற்குரிய விடயம் தான்.

மனிதன் எதை மதித்தான்...
பணத்தை மதித்தான்
ரணத்தைக்கூட மதித்தான்
மனத்தை மதிக்கத்தான் மறந்துவிட்டானா
இல்லை, மறைத்துவிட்டானா...?

சமூகத்தால் நான் அனுபவித்தது பல...
பணம் எனைப்படுத்திய பாடு அபாரம்...
நம்பிய நண்பர்கள் வெளிவேஷ உறவுகள்...
அக்கம் பக்கத்தார் வட்டியின் விளிம்புகள்...
சொந்த உறவினர்கள் சொத்துப் பேய்கள்...
ஆயுள் என்பதைத் தூக்கிச் சுமந்த
அன்புச் சகோதரனின் மரணப்படுக்கை...
எதிர்ப்பார்த்த பற்றுதல் துரோகத்தின் விளிப்பு...

என்னைச்சுற்றிலும் கொலைகாரர்கள், என் மனதைக்குத்திச் சாய்த்த கத்திமுனைகள்,  என் கழுத்தை அறுத்துப் போட்ட வார்த்தைகள் எனும் அரிவாள்கள். தகுதி எனும் தன்னாதிக்கத் தலைகள். என் மனமெனும் பஞ்சுமெத்தை தீப்பற்றி எரியவே, ஓடினேன், ஓடினேன், ஓடிக்கொண்டிருக்கிறேன். எதுவரை ஓடுவேனென நான் அறியேன்.
ஆனால், என் ஓட்டம் என் பிறந்தநாள் ஒன்றில் கரைகண்டாலும் மகிழ்ச்சி தான் எனக்கு...

வாழ ஆசைப்பட்டேன் வாழ்க்கை
எனை வாட்டியெடுத்தது!
சாக ஆசைப்பட்டேன் வாழ்க்கை
எனை சாட்டையாலடித்தது!
வாழாமலும் சாகாமலும் வாழ்க்கை
எதற்குத்தான் எனக்கு என்ற யோசனை மட்டும் தான் இப்போது...

மனிதர்கள் என்னைத் தூக்கி எறிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, காரணம் மனித மனங்களின் இருட்டுப் போர்வையிலிருந்து நான் தப்பித்துவிட்டேன். யாருக்கும் என்னைப் பிடிக்காமல் போனதில் அளவிலா ஆனந்தம், காரணம் நான் உண்மையாக இருக்கிறேன். அன்பு காட்டிய இதயங்கள் கூட என் இதயவேரை அறுத்துச் சென்றதில் வெகு சந்தோஷம், காரணம் இதயமென ஒன்று என்னிடம் இருந்திருந்தால் துடிதுடித்தே உயிர் நீத்திருக்கும். இப்போது கூட ராக்ஷச  பேய்கள் வாழும் உலகில் வாழ என் மனம் பொறுக்குதில்லை...

வாழுகிறேன், வாழ்க்கை எனக்காய் வர சம்மதிக்கும் என்றால்...
மீளுகிறேன், வாழ்க்கை எனக்காய் தர
சம்மதிக்கும் என்றால்...

அம்மா, அப்பா எதுவரை...? சொந்த பந்தம் எதுவரை...? நட்பு நையாண்டி எதுவரை...? ஆடை அணிகலன் எதுவரை...? உண்டி உறையுள் எதுவரை...? என் அழகு தான் எதுவரை...? என் அறிவுதான் எதுவரை...? என் உடம்புதான் எதுவரை...? எதுவுமே நிரந்தரமில்லை இவ்வுலகிலே... மண்ணோடு மண்ணாய்ப்போகும் இவையிடையே அடுத்தவனுக்கான ஏன் நான் வாழவேண்டும்...?

எது வேண்டும் எனக்கு...
எது வரும் என்னுடன்...
ஒன்று மட்டுமே வரும்
இறுதிவரை என்னுடன்...
கண்ணாடியில் சிரிக்கிறதே
அதுதான் வரப்போகிறது...
வேறெதுவும் எனைத்தாங்காது
தாங்குவேனென கூறியதெல்லாம்
தாக்கிச்சென்ற பின்பு எதுதான்
எனைத் தாங்கிவிடப்போகிறது...!

மரணம் என்னைத்தேடி வரும் வரை நான் போராடிக்கொண்டே இருப்பேன். ஓர் நாள் நிச்சயம் எழுந்தே தீருவேன் என சத்தமிட்டுக் கூறுவேன். என் வளர்ச்சி கண்டு வானுயரப் பறக்கும் பறவைகளும் அதிசயித்திடும். நதிக்கரைப் புற்களும் எனக்காய் தலைவணங்கிடும். சுழலுகின்ற இப்பூமியோ எனக்காய் பாதை விரித்திடும். நான் சூரியனாய் பிரகாசிக்க, எனைப்பார்த்து குரைத்த நாய்களெல்லாம் களைத்துப்போகும்.

எனை அழவைத்த அத்தனையும் எனைப்பார்த்து அழுதே தீரும், ஓர் நாள் நான் சிரிக்கையிலே...
எனை விழவைத்த அத்தனையும்
என்னிடம் விழுந்தே தீரும், ஓர்நாள் நான் எழுகையிலே...

"மனிதா!உன் மனதைக்கீறி விதை போடு மரமாகும்" என்றார்கள். மனிதர்கள் கீறிச்சென்ற என் மனதில் விதை போட்டிருக்கிறேன். அது வளர காலம் எடுக்கும். வளர்ந்து மரமாய் நிற்கையிலே கீறிச்சென்றவர்களுக்கும் நிழல் கொடுப்பேன், நான் யாரென எனக்கு உணர்த்திய செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதற்காக...

சுகமாய் கிடந்ததெல்லாம் சுமையாய்க் கனக்கிறது. கனத்தை கவிதையாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் கதை கேட்டு கவிதைகளும் கந்தலாகின்றன.
சாதிப்பதற்கான பயணம் சாகும்வரை தொடர அவா! காலம் இட்டுச்செல்லும் பாதையில் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன்.

வாழ்வில் நிரந்தரமின்றி அழிந்துபோகும் பணம், சொத்துக்காக மனித மனங்களைக் காயப்படுத்தி இன்புறாதீர்கள். தலங்களுக்கு செல்வதால் மட்டும் புண்ணியம் வந்து சேரப்போவதில்லை, மாறாக ஒரு குடும்பத்தையேனும் வாழ வையுங்கள். புராணபடனம் செய்வதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை, மாறாக பிறரிடம் அன்பு வார்த்தைகளை வெளிப்படுத்துங்கள். அருகிலொருவன் பசியுடன் இருக்கையில் புசிக்காதீர்கள், அவனுக்கும் நம்மைப் போலப் பசிக்குமே என சிந்தியுங்கள்.

அன்பு செலுத்திய மனத்தை தூக்கி எறிய முன்பு பல தடவை யோசியுங்கள், ஓர் நாள் அதே போல உங்கள் மனமும் தூக்கியெறியப்படலாம். கடந்து வந்த பாதைகளை சற்றேனும் திரும்பிப் பாருங்கள், நீங்கள் தாண்டி வந்த முட்கள் பிறர் கால்களில் குத்திவிடலாம்.

பொதுநலம் இல்லையெனில் பரவாயில்லை, அது எல்லோருக்கும் தேவையும்படாது. சுயநலம் வேண்டும், அது நமக்கு மட்டும் நலமளிப்பதாய் இருக்க வேண்டுமே தவிர பிறரை அழித்து நாம் நலன் காண்பதாய் இருந்துவிடக்கூடாது.

அன்பான ஆண் மக்களே! புகைத்தலை நிறுத்துங்கள். நீங்கள் விடும் புகை உங்கள் மீது அன்பு கொண்டவர்களின் நுரையீரலை மட்டுமல்ல, மனதையும் பொசுக்கிவிடுமே!
குடியை விட்டொழியுங்கள். நீங்கள் குடிப்பது பிறர் மனதில் விஷமாய் இறங்கி அவர்களைக் கொன்றுவிடுமே!
பெண்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொள்ளுங்கள். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மாதாந்தம் மூன்று நாளேனும் ஓய்வு கொடுங்கள். பெண்கள் மீது கரிசனை காட்டாதீர்கள், மாறாக அக்கறை காட்டுங்கள்! உங்களுக்கு தாயாய் இருக்கும் பெண்களை நீங்கள் குழந்தையாய் பார்த்துக் கொள்ளுங்கள்!

அன்பான பெண் மக்களே! திருமணம் எனும் மாயவலையில் விழுந்து வாழ்வைத் தொலைத்து விடாதீர்கள்! ஒருவனுக்கு வேலைக்காரியாக இருந்து  சந்ததி விருத்தி பண்ணிக்கொடுத்து உரிமைகளையெல்லாம் தொலைப்பதற்கு நீங்கள் பெண்களாக பிறக்கவில்லை. பெண்ணாய் பிறந்ததன் அர்த்தம் உணருங்கள்! உரிமைகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்! பின்பு இணையுங்கள் மண பந்தத்தில். அடிமைப்பட்டு கிடக்கும் வாழ்விலிருந்து மீண்டெழுங்கள். அதே சமயம் ஆண்களின் மனதை உணர்ந்து கொள்ளவும் செய்யுங்கள். ஆவேசத்தால் அன்பு வைத்த ஆணின் மனதை இழந்து விடாதீர்கள். அவர்களுக்கு "பெண்" என்ற அர்த்தத்தை அன்பால் கற்றுக் கொடுங்கள். என்றைக்கும் அவர்களைக் கைவிடாதீர்கள்! உரிமை பெறும் எண்ணத்தில் அவர்களது உரிமையைப் பறித்து விடாதீர்கள்!

இன்றைய பொழுதில் வாழ்த்துக்கள் வேண்டாம்; நான் பிறந்தது வாழ்த்துதற்குரியவொரு விடயமென நான் கருதவில்லை...

மாறாக, ஒரு காரியம் பண்ணுங்கள், மனங்களை மாற்றுங்கள்-அது பிறரை முடிந்தவரை மகிழ்விக்கும் வண்ணம்!

இந்தப் பி(ர/ற)விக்கு அன்பு காட்டி ஏமாளியாய் வாழத்தான் தெரியுமே தவிர, அன்பை முறித்து ஏமாற்றிச் செல்லத் தெரியாது.

இப்பொழுதெல்லாம் என் கண்கள் கலங்குவதாயில்லை, காரணம் அவற்றில் வடிப்பதற்கென்று ஒரு துளி கண்ணீரும் மீதம் கிடையாது, மீறியும் வடிந்தால் அது ஓ பொஸிட்டிவ்(O+) ஆக இருக்கலாம்.

தொடரட்டும்.....
என் வாழ்க்கைப் பயணம்.


பிரவீனா-ஹட்டன்.

Post a Comment

0 Comments