Subscribe Us

header ads

மனைவியை மதிக்க மறுத்தாலும் பெண்மையையும் தாய்மையையும் மதிப்போம்! - கவிதை


                    ☆கூற்றுவன் நான்!




காதலித்து கட்டினேன்
காயங்களும் தந்தேனே!
பேதலித்து நிற்கின்றேன்
பெருஞ்சுமையும் ஆனதே!

சண்டை போட்டாய் என்னிடம்
தாயிடம் தாழ்த்திப் பேசவே,
மண்டை உடைய அடித்தேனே
நானும் ஒரு புருஷனா?

தலையணை எறிந்தாய் என்மீது
பறந்ததோ வெறும் பஞ்சு தானே,
நானெறிந்த வார்த்தையிலே
உடைந்தது உந்தன் நெஞ்சமுமே!

தலையைப்பிடித்து கதறினாய்
துடியாய்த் துடித்து வீழ்ந்தாயே
தலைக்கணம் பிடித்து நானோ
தூக்காமல் தாக்கி நின்றேனே!

மீண்டும் எழுந்து வந்தாய்
காலைக் கட்டிப்பிடித்தாய்
மாறாத வெறுப்பில் நானே
எட்டியும் உதைத்து விட்டேனே!

கால்களில் வழிந்த குருதியுமே
என்னுயிரைக் கொன்று தள்ளியதா?
எனக்கு தெரியாமல் போனதுவா
உனக்கு சிசு தந்த இடமதுவென்று!

"அம்மா" என்ற சத்த அலறல்
என்னைதான் நீ அழைத்தாயா
கீழே சொட்டிய இரத்தமும் தான்
உன்னை அப்படி அழைத்ததுவா?

அதுவரை நானும் அறிவிலியா
இரத்தம் கண்டுதான் பயந்தேனா?
கால்களை விரித்துப் பார்த்தேனே
கைகளில் சிசுவின் துகள்களுமா?

ஐயோ நெஞ்சம் வெடிக்கிறதே,
கையில் குருதி நிறைகிறதே!
அள்ளி வந்தேன் உன்னையுமே,
ஆண்மை என்னைக் காறித்துப்ப!

தெரியாது நீ கர்ப்பம் என
தாதி எனக்கு சொல்லும்வரை!
என்ன பதில்தான் சொல்வேனோ
நீயும் கண்திறந்து பார்க்கையிலே!

கண்கள் மெல்ல திறக்கிறதே
கண்ணீர் கீழே வழிகிறதே
வாயும் ஏதோ முணுமுணுக்க
நெருங்கிக் கேட்கிறேன், "சாப்டியா?"

உயிரைத் துளைத்து இறங்கியதே!
என்னை உயிராய் சுமப்பவளே!
உன்னைக் கொடுமை செய்தேனா,
நான் தாய்மை பறித்த கூற்றுவனா?

கையோ  உன் கால் பிடிக்க
காலம் உன் பால் குடிக்க
"மன்னிப்பாயா கண்மணியே,
குழந்தையை நான் கொன்றேனே!"

"என் குழந்தை சாகலையே
பக்கத்துலயே இருக்கானே"
கைகள் வருடின தலையையுமே!
இவள்தான் எனக்கு என்றும் தாயுமே!


பிரவீனா-ஹட்டன்

Post a Comment

0 Comments