☆மரணமூச்சு!
இந்த நொடி சொந்தமில்லை
மறுநொடியில் உயிர் பிரிந்தால்
காத்துவந்ததோ நிலையில்லை
வரும் வழியில் எடுத்துச்செல்ல...
இன்றொரு விபத்து மூவர் பலி
நாளை ஒன்றென நாளுக்கொன்று
மரணம் என்பது தீர்மானம் தான்
அதில் ஏன்தான் இந்த அவமானம்..!
வார்த்தைகள் மனதைப் பொசுக்க
வலியைத் தரலாம் இலகுவினில்
கண்ணீர் சொல்லுமே காலம்முழுதும்
வார்த்தைக்காகவே வீழ்ந்தேனென்று...
காயப்படுத்தி வாழ்ந்துவிடலாம்
காயப்பட்டும் தாழ்ந்துவிடலாம்
காயமும் ஆகுமே சாயமாய்
காலவிளிம்பில் நாம் கிடக்கையிலே...
தலங்கள் போகிறோம் புண்ணியமா
சிலையைத் தொட்டால் பாவமுமா
எதுவுமே இல்லை அண்டத்திலே
மனம் மட்டுமே ஏன் வஞ்சத்திலே...
மனதினைக் கொலை செய்யலாம்
சொற்களை அள்ளி இரைக்கலாம்
மரணத்தின் தருவாயினிலே
தவறெண்ணிதான் என் பயன்..?
விரும்புவதும் நடந்துவிடாது
நடப்பதையே விரும்பிவிடு
பிறர் விருப்பை நிறைவுசெய்
உன் விருப்பு நிறைந்துவிடும்..!
வெறுப்பென்பது நிலையல்ல
உண்மையையே யாசிக்கும்
துண்டாய் நொறுக்கிய இதயம்கூட
மரணப் பொழுதில் மூச்சுவிடும்..!
பெருமையும் ஆதிக்கமும் ஏனோ
பெயர் வாங்கி புகழும் சேர்க்கவா
உனை விரும்பும் உயிரினை
குத்தியும் கொன்றுவிடாதே..!
வார்த்தைகள் வாழவைக்கும்
வாழ்க்கையோ செயலுணர்த்தும்
அன்பில்லை என்றாலுமே
அன்பே என்றால் உயிர்துடிக்கும்..!
என்னவோ நியாயம் இருக்கட்டும்
ஏதேதோ மாயம் நடக்கட்டும்
எல்லாமே ஒரு மாயை என்று
மரணமூச்சு உணர்த்திவிடும்..!
பிரவீனா-ஹட்டன்
0 Comments