Subscribe Us

header ads

சந்தேகத்தால் அகலிகை மீண்டும் கல்லானாள் இவள் உருவில்! - கவிதை


               ☆உன் அகலிகை கல்லானேன்!



என் கோதமா....
உனக்காய் எழுதுகிறேன்
மரணத்தின் விளிம்பில்
மன்னிப்புக் கடிதம்.

நான் உன்மீது கொண்டது
காதலென்று நினைத்தாயோ
அது காதல் கடந்த சாதல்
உன்மீது விழித்தது
விழியென்று நினைத்தாயோ
அது கல்லில் பதிந்த உளி
உன்னுடலை விரும்பியது
காமம் என்று நினைத்தாயோ
அது வாங்கி வந்த சாபம்...

தவறிழைக்க நினைக்கவில்லை
நீயென்று நினைத்து
செய்துவிட்ட பாவம்
நீ தந்து சென்ற மனநிலை
உன்னை உருவகித்துச் செல்ல
எல்லாம் நீயாய் தெரிந்தாய்
என்மனம் கண்ட பிறழ்ச்சி
மானம் அறியாது தந்தது
உருவகத்திடம் உள்ளதனை...

உனையன்றி ஒருவனை
மனதாற நினைக்கவில்லை
இனி நினைத்தால் உடனே
மண்சேரத் துடிப்பேன்
நீ தந்துவிட்ட ஆசை
நீ தந்துவிட்ட முத்தம்
நீ தந்துவிட்ட சுவையும்
சுகமாக இருக்கும் என்றாலும்
சுமையாகவும் கனக்கிறது...

மீண்டும் உன் சந்தேகம்
எனை என்ன செய்யும்
என்பதறியாது தூக்கிப்போட்ட
அதே இடத்தில் அதே நினைப்பு
துடிதுடித்து தவிதவிக்க
காலமும் காத்திருப்பேன்
உயிர்ப்பிக்க எவனோ ஒரு
ஸ்ரீராமன் வரவேண்டாம்
நீயேதான் வரவேண்டும்...

நீ தொட்ட சுவடுகள் மாறாது
நீ தந்த மூச்சு சாகாது
சந்தேகம் அள்ளி வீசினாலும்
உனையெண்ணியே கிடப்பேன்
உனையள்ளியும் அணைப்பேன்
மார்போடு மார்பாக உன்னை
இதழோடு இதழாக இணைப்பேன்
காட்சிப் பிழைக்காய் வருந்தி
உன் அகலிகை கல்லானேன்...


பிரவீனா-ஹட்டன்






Post a Comment

0 Comments