Subscribe Us

header ads

கொஞ்சம் தள்ளிப்படு!


                ☆கொஞ்சம் தள்ளிப்படு!



அருகருகே உரசி அழகாய் அமர்ந்து
உன் கைகோர்த்து முகம் சிணுங்கி
கழுத்தில் வாங்கிக் கொண்டது
தாலி எனும் தூக்குக்கயிறா,
இல்லை, மலர் தூவி பரிகசித்து
ஸ்பரிசம் பகிர்ந்து உடலிணைந்து
உன் காதலில் என்னை இணைத்தது
கலவி என்னும் கல்லறைச்சுவரா...?

ஆயிரம் வண்ணம் நிறைந்த 
மணவறையின் பூக்களையும்
அழகாய்த் தூவி அடுக்கி வரைந்த
படுக்கையறையின் பூக்களையும்
இன்று மொத்தமாய் ஏந்திக்கொண்டு
தனியாய்ப் படுத்துக்கிடக்கின்றாயே
பாதியை நான் சுமந்து பாதையில்
வருவேனா, பாவியாகிப்போவேனா...?

இதயத்தை பெட்டியில் வைத்து
பாதுகாப்பேன் என கூறியிருந்த வார்த்தையுமே சாபமாகி பெட்டியில்
புதையுண்டு எனைப் புதைக்கிறதா,
இரண்டாய் இருந்து முதலிரவில்
ஒன்றாய் துடித்த இதயங்கள் இன்று இரண்டாகிப்போய் மீண்டும்
ஒன்றாய்த் துடித்துப் பதைக்கிறதா...?

வேண்டாம் வேண்டாம் தனியாய்
துடித்திட வேண்டாம் என் இதயம்
போதும் போதும் பூக்களை விலக்கு
கனத்தை நீ சுமந்தது போதும்
கொஞ்சம் தள்ளிப்படு நானும்
வருகிறேன் உன்னருகில் உரசிட,
முதலிரவும் முடிவிரவும் நம் உடல்
இணைந்ததாகவே இருக்கட்டுமே...!

எப்போதும் உன்னருகில் இடம் வேண்டும், நீ மரித்தாலும் கூட...


☆பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய:
https://tamil.pratilipi.com/user/8e8a3971ag?utm_source=android&utm_campaign=myprofile_share


பிரவீனா-ஹட்டன்

Post a Comment

0 Comments