☆திறந்த அறை
மீனா மிகுந்த அயர்வுடன் கட்டிலின் ஒரு ஓரமாய் படுத்திருந்தாள். அறையின் கதவு தாழ்ப்பாள் இடாமல் சற்றுத் திறந்திருந்தது. அவளது கண்கள் அவளை அறியாமலேயே மெதுவாக மூட ஆரம்பித்தன. சட்டென்று ஒரு கை தன் இடையில் விழ, திருடன் பீரோ கதவை மெதுவாக திறப்பது போல் அவளது கண்களும் திறந்தன. மேலே விழுந்த கையை நகர்த்தி விட்டு ஒரு சிணுங்கல் சிணுங்கியவாறே மீண்டும் கண்ணயர்ந்தாள். இரு நொடிகளில் மீண்டும் அவள் மீது விழுந்த கை அவளது வயிற்றை மெதுவாகத்தடவ ஆரம்பித்தது. விழித்துக்கொண்ட அவள்,
"சும்மா இரு வசந்த்... எனக்கு தூக்கம் வருது... தூங்க விடு ப்ளீஸ்...." என்று மறுபடியும் கையை நகர்த்தி விட்டு மெதுவாக கண்களை மூடினாள்.
"சும்மா இருக்கவா... முடியாது மீனு... நீ வேணும்னா தூங்கு... நா(ன்) என் வேலைய பா(ர்)க்குறே(ன்)"
என மறுபடியும் அவளது வயிற்றில் கோலம் போட ஆரம்பித்தது அருகில் படுத்திருந்த வசந்த்தின் கை.
"ஐயோ வசந்த் யேன்டா இப்டி பண்ற...?" என வேகமாகக் கையை உதறித்தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்தாள் மீனா. அவளது கண்கள் அரைத்தூக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தன.
"நான் என் புள்ள கூட விளையாடுறேன், உனக்கென்னடி..." என அவளது கன்னத்தை செல்லமாகக் கிள்ளிவிட்டு மீண்டும் வயிற்றுக்குச் சென்ற அவனது கையை மீனா இறுகப்பற்றிக் கொண்டாள். அவளது கண்கள் தூக்கம் மறந்து ஒருவித போதையில் வசந்த்தின் கண்களை உற்று நோக்கியவாறே கலங்கி நின்றன.
"ஹேய்... என்னாச்சு அழுறியா... சாரி செல்லம். நீ படுத்துக்கோ... நா(ன்) டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்..." என அவனது கைகள் அவளை அணைத்துக் கொண்டன.
"இல்லப்பா... நா(ன்) அழல. இன்னும் மூணு மாசத்துல இவன பெத்து உன் மடியில போட்டா எப்டி இருக்கும்னு யோசிச்சு பா(ர்)த்தேன், கண் கலங்கிடுச்சு" என சட்டையில்லா அவனது மார்பின் சூட்டில் குளிர்காய்ந்தாள் மீனா.
"ஹூம்... இவன் இவன் ங்குற, எனக்கு ஒரு பொம்பள புள்ளய பெத்து தரமாட்ட போல இருக்கே!" என சலித்துக்கொண்ட வசந்த்தின் வாயை தன் வலக்கையால் மூடிக்கொண்டு இடக்கையால் அவனது காதைத்திருகியவாறே, " இந்த கதையெல்லாம் வேணாம்... பையன் தான் பொறப்பான்..." என்றாள்.
"ஆஆஆஆஆ.... வலிக்குதுடி காத விடு..." என அவளது மூக்கைச் செல்லமாகக் கடித்தான் வசந்த்.
"சரி சரி... உன் இஷ்டப்படி பையனே பொறக்கட்டும்... சீக்கிரம் பெத்து தந்துட்டு பொண்ணுக்கு வழி பண்ணு தாயே..." என மீனாவின் மடியில் படுத்துக் கொண்டான்... அவள் முகம் தக்காளி போல் சிவந்து போனது.
"என்னம்மா... வெக்கமா...?"
அவளது கண்கள் செல்லமாய் முறைத்தன...
"என்னம்மா ஓகே தானே....?"
"பையன் கேட்டுட்டு இருக்கான். கொஞ்சம் டீசன்ட்டா பேசுப்பா.... ஷ்ஷ்ஷ்ஷ்...."
"தங்கச்சி பாப்பா கேட்டதே அவன்தான்டி... நீ வேணும்னா கேட்டுப்பாரு ... என்ன தங்கம்?" என மீனாவின் வயிற்றில் காதை வைத்து வினவினான். அவள் வெட்கத்தால் காய்ந்து கனிந்து போனாள்.
மடியில் வசந்த்தைக் கிடத்திக்கொண்டு இரு குழந்தைகளுக்குத் தாயானாள் மீனா. அவனது கண்களில் இதுவரைப் பார்த்திராத பரவசத்தை அவள் உணர்ந்தாள்.
"மீனுக்குட்டி... உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்...." என மெலிதாய்ப் புன்னகைத்தான் வசந்த்...
"என்னடா... என்ன... என்னன்னு சொல்லு... ப்ளீஸ் சொல்லு..." என அவள் அவனைக் குலுக்கிய குலுக்கலில் வார்த்தையிலும் வேகத்திலும் ஆர்வம் தெரிந்தது.
" அதான் சர்ப்ரைஸ்ன்னு சொல்லிட்டேன் ல.. இப்பவே கேட்டா எப்டி... சொல்ல மாட்டேனே..."
"சொல்லுடா.. சொல்லு...சொல்லு... சொல்லு..." என மடியில் கிடந்த அவனது நெஞ்சைக் கைகளால் குத்தி விளையாடினாள் மீனா...
" ஓகே.. ஓகே.. விடமாட்டியே... சொல்லிட்றேன்,
அடுத்த மாசம் உனக்கு வளைகாப்பு செய்ய ஏற்பாடு பண்ணியிருக்கேன்..." என அவளது வயிற்றில் குழந்தைக்கு முத்தமிட்டான்.
மீனா மகிழ்ச்சி வெள்ளம் ஆர்ப்பரிக்க, "நிஜமாவாடா... தேங்க்ஸ் டா.. லவ் யூ லவ் யூ லவ் யூ" என அவனது முகத்தை முழுவதுமாக எச்சில் செய்தாள். அவளது ஆனந்தக் கண்ணீர் அவன் கண்களை நனைத்தது. அவன் மீனாவின் உதட்டில் முத்தமிட அவள் வாயடைத்துப் போனாள்.
இலேசாகத் திறந்திருந்த கதவின் வழியே, மீனா யாருமில்லா அறையில் தனியாகப் பேசிக்கொண்டிருப்பதை கவனித்த தாயின் கண்களில் தேங்கிய கண்ணீர் அருகிலிருந்த மேசை மீது கிடந்த "கண்ணீர் அஞ்சலி" நோட்டீஸில் விழுந்து தெறித்தது.
☆பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய :
https://tamil.pratilipi.com/user/8e8a3971ag?utm_source=android&utm_campaign=myprofile_share
பிரவீனா-ஹட்டன்
0 Comments