Subscribe Us

header ads

தன் காதலை தன்னலமின்றி நிரூபித்த உண்மைக் காதலன்- சிறுகதை


                  ☆உண்மைக் காதலன்



ஏதோ பயத்துடன் கைகளைப் பிசைந்தவாறு
கட்டிலின் ஓரமாய் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. அவள் முகம் அந்தி வானம் போல் சிவந்திருந்தது. மேட்டிலிருந்து பள்ளம் நோக்கிப் பாயும் ஆறு போல அவளது நெற்றியில் ஊற்றெடுத்த வியர்வை கழுத்து வழியே இறங்கி மார்பை நனைத்தது. கால்கள் ஐஸ்கட்டி போல் விறைத்திருந்தன.
கதவு மெதுவாகத் திறந்தது. ஓரக்கண்ணால் பார்த்தாள். கண்ணன் மெதுவாக கதவை மூடி தாழ்ப்பாள் இட்டான். இவளுக்கோ தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருக்கும் போது ரயில் வருவது போலிருந்தது அவனது வருகை.

ஒருவித பரபரப்புடன் தயங்கி தயங்கி வந்த
அவன் அர்ச்சனாவின் பக்கத்தில் அமர்ந்தான். அவள் சிறிது நகர்ந்து அமர்ந்தாள். சில நிமிடங்களுக்கு அறையே அமைதியாய் இருந்தது.

"அர்ச்சனா... ஏதாவது பேசு."
அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
" உனக்கு யேன் இப்டி வேர்க்குது....ஏ சி போடட்டுமா?" என்றவாறே அவள் நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்தான். வெடுக்கென்று அவனது கையைத் தட்டிவிட்டாள் அர்ச்சனா.

கண்ணன் திகைத்துப் போனான். தான் சுமந்து வந்த கனவுகள் காற்றில் போய் விடுமோ என அவனுக்குள் பயம் எழ ஆரம்பித்தது.
"என்னாச்சு? உடம்புக்கு ஏதும் சரியில்லையா? நீ படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ..."
மனதில் எதையோ நினைத்து புழுங்கிக் கொண்டிருந்த அர்ச்சனா குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தாள். நிறுத்தாது அழுது கொண்டே இருந்தாள். கண்ணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளை அணைத்துக்கொள்ள நீண்ட கைகளையும் தன்னடக்கத்துடன் நிறுத்திக் கொண்டான்.
"அர்ச்சனா..... அர்ச்சனா எதுக்காக அழுற? அம்மா ஏதாவது சொன்னாங்களா? என்னன்னு சொன்னா தானே தெரியும். எதுனாலும் சொல்லு பரவால்ல. முதல்ல அழுறத நிப்பாட்டு. இன்னைக்குத்தானே கல்யாணம் பண்ணுனோம். முதல் நாளே யேன் இப்டி அழுற?"

அவன் அடுக்கடுக்காய்ப் பேசினாலும் அவளது அழுகை ஓய்வதாகத் தெரியவில்லை. அவள் சமாதானமாகும் வரை அமைதி காத்தான். மணித்தியாலம் கடந்தது. ஏதேதோ ஆசைகளுடன் அறைக்குள் வந்த கண்ணனுக்கு தன் ஆசைகளில் மண்ணை வாரிப் போட்டது போலிருந்தது. சிறிது நேரம் கழித்து அவளது கண்களில் கண்ணீர் வற்றிவிட்டது. அவளும் அழுது அழுது சோர்ந்து போனாள்.
கண்களைத் துடைத்த வண்ணம் அவனைப் பார்த்தாள்.

" நா உன் புருஷன். என்னன்னு சொல்லு. உன் கஷ்டத்துலயும் எனக்கு பங்கு இருக்கு.
என்ன பிடிக்காமத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?" என அவனது குரல் தடதடத்தது.
"உங்கள .... உங்கள....." அவளது பேச்சு கரகரத்தது.
கண்ணன் அருகிலிருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தான். அவள் அண்ணாந்து மடமடவென்று ஒரு சொட்டு விடாமல் குடித்தாள். அதில் பாதி அவளது சேலையை நனைத்தது. கண்ணனுக்கும் இனம் புரியாத படபடப்பு.
" உங்கள பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கல,"
அவன் மனதில் ஒரு ஆறுதல் உண்டாகி உறைய முன்,
"உங்கள பிடிச்சதாலயும் கல்யாணம் பண்ணிக்கல"

அவனது இதயம் பல நூறு துண்டுகளாய் உடைந்தது.
"என்னதான் சொல்ல வர்ற? எதுனாலும் தெளிவா பேசு. எதையும் மறைக்காத."
"நா காலேஜ் படிக்கிறப்போ ஒரு பையன லவ் பண்ணேன்...." என அவனது முகத்தை லேசாக நிமிர்ந்து பார்த்தாள். அவன் சாந்தமாக இருந்தான்.
"மேல சொல்லு..."
அர்ச்சனாவின் மன ஆர்ப்பாட்டம் சற்று தணிய ஆரம்பிக்கவே அவள் பேச ஆரம்பித்தாள்.
"... அவன்தான் முதல்ல ப்ரப்போஸ் பண்ணான். எனக்கும் அவன ரொம்ப பிடிக்கும். சோ, ஓகே சொன்னேன். ரெண்டு பேரும் நாலு வருஷம் லவ் பண்ணோம். நா அவனத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு ரொம்ப ஆசையா இருந்தேன். பட்,....."
கண்ணனது முகம் கடும்பனியில் குன்றியது போலிருந்தது.
"யேன் நிறுத்திட்ட...? சொல்லு."
"...பட், அவன் என்ன பிடிக்கலன்னு சொல்லிட்டு போயிட்டான்" என்று மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

"அர்ச்சனா அழாத. இந்த காலத்துல லவ் பண்றதெல்லாம் சகஜமான விஷயம்தான். எனக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்ல. ஃப்ரேங்க்கா சொல்லனும்னா நா யாரயும் லவ் பண்ணதில்ல. உன்ன பொண்ணு பார்க்க வந்ததுக்கு அப்புறம் தான் உன்ன விரும்ப ஆரம்பிச்சேன்... ஐ லவ் யூ."
அதன் பின்பும் கூட அவளுக்கு ஒரு நெருடல்.
"இன்னும் பேசனும்....."
"பேசு. இன்னைக்கு நைட் முழுக்க பேசு. இது உனக்காக நா தந்த முதல் ராத்திரி.
மனசுல உள்ளது எல்லாத்தையும் கொட்டித் தீத்துரு."
" அவன் விட்டுட்டு போன அப்புறம் என்னால முடிஞ்சவரைக்கும் அவன தேடுனேன். அவன் கிடைக்கல. அவன்கூட பேசவும் சந்தர்ப்பம் கிடைக்கல. எனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு அம்மாவுக்கு ரொம்ப ஆச. அப்பாவும் இல்லாம என்னையும் தங்கச்சியையும் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குனாங்க. அவங்க பேச்ச மீற முடியாமத்தான் உங்கள கட்டிக்க சம்மதிச்சேன்." என பெருமூச்சு வாங்கிக் கொண்டாள்.

"அப்போ... என்ன உனக்கு பிடிக்கலயா?"
அதைக்கேட்ட அர்ச்சனா, கண்ணனின் வசீகர கண்களில் சிக்கிக் கொண்டாள்.
"பிடிச்சிருக்கு..,பட்....." எனத் தயங்கி தயங்கி கூறினாள்.
கண்ணனுக்கு அளவில்லா ஆனந்தம். அர்ச்சனாவை பெண் பார்த்து விட்டு வந்த நாள் முதல் வெகு ஆழமாய் அவளைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான். அதனால் தான் அவளது கடந்த கால காதல் இவனைப் பெரிதாய் பாதிக்கவில்லை. அவளும் விட்டுச் சென்ற காதலனை வெறுத்து இரு வருடங்கள் ஆகியிருந்த நிலைமையில் அவளது மனமும் வெற்றிடமாய் கிடந்தது.
" உனக்கு என்ன பிடிச்சிருக்கு ல்ல. அப்புறம் என்ன? உன்னோட பழைய லைஃப் பத்தி மறந்துரு. எனக்கும் அது தேவையில்ல. அவனோட பேர் கூட நீ எனக்கு சொல்ல வேணாம். நானும் கேட்க மாட்டேன். இனிமேல் நா உன்ன நல்லா பார்த்துக்குவேன். அவன மாதிரி விட்டுட்டு போயிட மாட்டேன்." என அவளது கையை இறுகப் பற்றினான். அவன் தன்னைப் புரிந்து ஏற்றுக் கொள்வான் என அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை. அவனது கைகள் அவளுக்கு ஆறுதல் அளிக்கவே,
"நா இன்னும் முடிக்கல..."
"இப்போதான் மணி பத்து. விடியும் வரை டைம் இருக்கு, நீ  சொல்லு" என கண்ணன் பிடித்த கையை விடவில்லை.
மனதைக்கல்லாக்கிக் கொண்ட அர்ச்சனா தனது மறுகையால் மாராப்பை விலக்கினாள். அவளது நெஞ்சைப் பார்த்த கண்ணன் பல்லைக்கடித்தவாறு தலையைத்திருப்பி கண்களை இறுக மூடிக்கொண்டான். அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை தன் மனைவியின் பொன்னிற மேனியில் இருந்த வெட்டுக்காயங்களின் வடுக்களை...

அவளது கண்ணீர் மார்பு வழியே கீழிறங்கியது. அந்த தளும்புகள் அவனுக்கு புரியவைத்தது அவளது காதலின் ஆழத்தை.
"என்னம்மா.... என்ன இதெல்லாம்....யேன் இப்டி செஞ்ச....?" என்று நடுங்கிய அவனது கைகள் அவளது முழுமதி முகத்தைத் தாங்கிப்பிடிக்க, அவளது கண்ணீர் அவன் கைகளில் குட்டையானது.

அவள் ஏதோ சொல்ல எத்தனித்தாள். தன் ஒரு கையால் அவளது வாயை மூடிய அவன்,
" வேணாம். ஒன்னும் சொல்லாத. நா என்னைக்கும் உன்கூட இருப்பேன், உனக்கு பிடிச்ச மாதிரி... உன் உடம்ப எனக்கு தர்றதும் தராததும் உன்னோட இஷ்டம். உன் மனச மட்டும் தா" என்று அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

அரச்சனா மறைத்து விட்ட போதிலும் அவளது கண்ணீரும் காயங்களின் வடுக்களும் அவனுக்கு உணர்த்தியது, அவள் தன் காதலனுடன் மனைவி அந்தஸ்தில் வாழ்ந்துவிட்டாள் என்று.  ஆனால் அதே  கண்ணீரும் காயங்களின் வடுக்களும் அவளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவும் செய்தது.
"ஐ லவ் யூ..."
தன் மார்பில் முகம் பதித்திருந்த அவளது தலையில் ஆத்மார்த்தமாக முத்தம் பதித்தான்.


☆பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய :

பிரவீனா-ஹட்டன்

Post a Comment

0 Comments