☆கூலிக்காக...
கங்காணி ஒருபுறம்
கணக்கப்பிள்ளை மறுபுறம்பார்வைகளை அள்ளி வீச,
சேலையை இழுத்து தோள்வழியே
மார்பைமூடிக்கொள்ளும்
மலையகத்துப் பெண்கள்
கூலிக்காக கொழுந்தெடுக்கும்
நிலையை பிரித்தானியன்
தந்து சென்றானே!
நேரம் தவறிச் சென்று
ஏச்சுப் பேச்சு வாங்கி
றாத்தல் குறைந்தால்
சம்பளம் குறையுமே என்று
காலைப்பனியில் நடுநடுங்கி
வெடுக் வெடுக்கென்று கிள்ளித்
தள்ளும் பெண்களின்
இளம் விரல்கள் ஏன்
கம்ப்யூட்டரைத் தட்டாதா?
மெத்தப் படித்த மேதாவி
ஏதேதோ கண்டுபிடித்தானே...
எந்திரம் என்றான் எந்திரன் என்றான்
மலையகப் பெண்களைக் காட்டிலும்
ஒரு எந்திரன் இருந்துவிடுவானா?
பெற்ற பிள்ளையை பிள்ளைக்
காம்பராவில் விட்டு வந்து
இராப்பகலாய் கொழுந்து கிள்ளும்
பெண்களின் நிலை பரிதாபம்!
ஆளுக்கொரு நிரையில்
மணிக்கணக்காக ஆய்ந்து
நிறுவை நேரம் வந்ததும்
கால்கடுக்க வரிசையில் நின்று
மெல்ல மெல்ல நகர்ந்து
முன்னேறிச் சென்று தன்
கொழுந்தைத் தூக்கி
தராசுத்தட்டில் நிறுத்த முன்பு
இடுப்பு முறிந்து விடும்!
நாளெல்லாம் கூடை சுமந்து
கூடையிலே பாரம் சுமந்து
அமுக்கி அமுக்கி நிறைத்து
வரும் கொழுந்தினை
நல்ல கொழுந்து கெட்ட கொழுந்து
என தரம் பிரித்து கணக்கப்பிள்ளை
ரெண்டு றாத்தலை வெட்டும் போது
பதபதைக்கும் நெஞ்சம் மறுநாளும்
கூலிக்காக மலைக்கு செல்லும்!
https://youtu.be/zYlHzZMlIr8
Like,Share,Comment & Subscribe
☆பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய:
பிரவீனா-ஹட்டன்
0 Comments