☆மாறித்தான் பார்ப்போமா?
நமது வாழ்க்கையில் நாம் எவ்வளவோ சந்தோஷத்தையும் துக்கத்தையும் கோபதாபங்களையும் ஆதங்கங்களையும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் அனுபவித்திருப்போம். ஆனால் அவற்றில் எதுவுமே நமக்கு நிரந்தரமாக இருந்ததில்லை என்பது உண்மை. இவற்றில் நமக்கு நிரந்தரமாக எது வேண்டும்? சந்தோஷமா?துக்கமா? கோபமா? ஆதங்கமா? ஆச்சரியமா? அதிசயமா? அநேகமானோர் கூறும் பதில் சந்தோஷம் என்பதாகும். பலர் அதிசயம் எனக்கூறுவர். அதிசயம் நடப்பினும் சந்தோஷமே விளைவாகும். ஆக, இப்புவியில் நாம் அனைவரும் சந்தோஷமாக வாழவே விழைகிறோம்.
எம்மால் துக்கமோ, சந்தோஷமோ, கோபமோ, ஆதங்கமோ எதுவானாலும் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால், நாம் எதைப் பற்றி அதிகமாக சிந்திக்கிறோமோ மனம் அதையே நமக்கு திருப்பித்தரும். அனைவரது வேண்டுதலுக்கும் பிரதிபலனும் இதுவேதான். கோவிலிலோ, தேவாலயத்திலோ, பள்ளிவாசலிலோ, விகாரையிலோ போய் செய்யும் வழிபாடு எல்லாமே ஒன்றுதான். நம் மனதிற்கு ஒரு சக்தி உண்டு, அது வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் கட்டுப்பட்டது. நமது உடலினுள் உள்ள சக்தி(மனத்தின் சக்தி), உடலுக்கு வெளியே உள்ள சக்தியோடு( சூழல் சக்தி) இணையும் போது உருவாகும் அலையானது நம் மனம் எண்ணுவதை செயல்படுத்தும்.
ஒருவன் எதைப்பற்றி முப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறானோ, எந்த உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறானோ அதுவே அவனுக்கு நிரந்தரமாகிவிடும். எல்லோரும் கேள்விப்பட்ட ஒரு விடயம் நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்பதாகும். அதை நாம் வாழ்வில் உணர்ந்துமிருப்போம். இவனுக்கு இது நல்லது, இது கெட்டது என மனதிற்கு தெரியாது, மாறாக அவனது எண்ணத்தையே நிறைவேற்ற முனையும். நாம் நேர்மறை சிந்தனைகளை வெளிப்படுத்துகையில் நமக்கு நேர்மறையான விடயங்கள் நிகழும், மாறாக எதிர்மறை சிந்தனைகளை வெளிப்படுத்துவோமாயின் எதிர்மறையான விடயங்களே நிகழும். (நேர்மறை: அன்பு, காதல், மகிழ்ச்சி, இரக்கம், அரவணைப்பு
எதிர்மறை: துக்கம், அழுகை, கோபம், ஆவேசம், பகைமை)
எதிர்மறை: துக்கம், அழுகை, கோபம், ஆவேசம், பகைமை)
நாம் ஒரு விடயம் குறித்து தொடர்ந்து அழுவதால் அழுகையை விரும்புபவர்களாகி விடுகிறோம். கண்ணீர் எமக்கு சொந்தமாகிவிடுகிறது. "கடன் நீங்க வேண்டும், கடன் நீங்க வேண்டும்" என மீண்டும் மீண்டும் "கடன்" என்ற வார்த்தையை சொல்லிக்கொண்டே இருப்பதால் நமது கடன் மேலும் அதிகம்தான் ஆகும். "கடன்" என்பது ஒரு எதிர்மறையான சிந்தனை. அது நமக்கு நேர்மறையா, எதிர்மறையா என நம் மனதின் எழுச்சிக்கு தெரியாது. இவன் கடனைத்தான் விரும்புகிறான் என்ற சக்தியை அது வெளிப்படுத்தி மேலும் மேலும் கடனையே பெற்றுத்தர எத்தனிக்கும்.
ஒருவன் "எனக்கு நோயே வரக்கூடாது" என ஒவ்வொரு நிமிடமும் எண்ணுகிறான், பிரார்த்திக்கிறான் எனக்கருதுவோம். இன்னுமொருவன் "நான் ஆரோக்கியமாக வாழ வேண்டும்" என பிரார்த்திக்கிறான். இவர்கள் இருவரில் யாருடைய பிரார்த்தனை சரியானது? முதலாமவனின் பிரார்த்தனையே பிழைத்து(தவறாகி)ப் போகிறது, காரணம்: நோயே வரக்கூடாது என்பதே எதிர்மறையான சிந்தனை ஆகும். ஆகவே நமக்கு நோய் அதிகமாகிவிடும். ஆரோக்கியமாக வாழக்கருதினால் ஆரோக்கியமே மிகும். பிரார்த்தனை என்பது அற்புதமான சக்தியைத்தரும், ஆனால் அந்த பிரார்த்தனை சரியானதாக இருக்க வேண்டும். ஆகவே, நமது சொல்லிலும் செயலிலும் நேர்மறையான சிந்தனைகளையே நாம் வெளிப்படுத்த வேண்டும்.
எப்போதும் பணத்தைப் பற்றியே சிந்திப்பவன் பணக்காரனாகி விடுகிறான். மாறாக எப்போதும் கடன் தீர்ந்துவிட வேண்டும் என சிந்திப்பவன் மேலும் கடனாளியாகவே ஆகிவிடுகிறான். இதற்கு காரணம், நம் மனதின் எழுச்சியே ஆகும். நமது வார்த்தைகள் மிகுந்த வலிமை கொண்டவை. ஒருவனை கெட்டவன் எனக் கூறுவதால் நாம் கெட்டவராகிறோம், ஒருவனை பாழாய்ப்போ என திட்டுவதால் நாமே பாழாகிறோம். மாறாக ஒருவன் மீது நாம் அன்பு காட்டினால் நமக்கும் அன்பே மிகும். நலமாய் வாழ் என வாழ்த்துவதால் நாமும் நலமாய் வாழ்வோம். நாம் பிறரிடம் நடந்து கொள்ளும் விதமே நம் வாழ்வை தீர்மானிக்கிறது.
நமக்கு வேண்டியவர் ஒருவர் மரணித்து விட்டார் எனின், அந்த மரணத்தை எண்ணி எண்ணி துக்கப்பட்டு அழுவதால் பயனென்ன? மேலும் மேலும் நமக்கு துக்கமே கூடி வரும். இறந்தவரின் புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் எதிர்மறை சிந்தனைகளே ஆட்சி செய்யும். இது போன்ற சம்பவத்தைக் கேள்விப்பட்டால் சம்பந்தப்பட்ட ஜீவாத்மாவிற்காக பிரார்த்தனை செய்துவிட்டு அதைப்பற்றி நினைக்காமல், பேசாமல் இருப்பது நல்லது. வீட்டில் ஒருவர் எதிர்மறையாக பேசினால் நாமும் அந்த உணர்வில் இணைந்து அதனை பலப்படுத்தி விடுகிறோம். அத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் அந்த இடத்தில் ஒரு நேர்மறையான அலைகளை உருவாக்கி விட வேண்டும்.
பிரச்சினை பிரச்சினை என்று கூறினால் பிரச்சினையே வந்து சேரும், பிரச்சினையே வரக்கூடாது என கூறினாலும் பிரச்சினையே வந்து சேரும். நாம் பிரச்சினையின்றி வாழ ஆசைப்பட்டால் நம் மனதில் பிரச்சினை என்ற எண்ணமே இருக்கக்கூடாது. "நான் சுமூகமாக வாழ்கிறேன்" என்று கூறுவதே உசிதமானது. வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை என்றாலும் சந்தோஷமாக வாழ்வதாகக் கருதுங்கள். பணமில்லை என்றாலும் நான் பணத்தின் அதிபதி என்று கருதி மகிழுங்கள். நமக்கு தேவையானதை நாம் அடைந்து விட்டதாகக் கருதி மகிழும் போது அதிர்வலைகள் அத்தேவைகளை நாம் மகிழும் வண்ணமே நிறைவேற்றிக்கொடுக்கும்.
பல வருடங்களாக குழந்தைப் பேறே இல்லாத தம்பதிகள் தமக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டதாகவும், அதனை குளிப்பாட்டுவதாகவும், பாலூட்டுவதாகவும் மனதாற உணர்ந்து அவ்வுணர்வை பூரணமாக விசுவாசிக்கும் பொழுது அதிசயம் நிகழும். எதிர்கால தேவைகளை இறந்தகால சிந்தனைகளாக்கும் போது நிச்சயமாக நல்லது நடக்கும். நான் பரீட்சையில் சித்தி பெற வேண்டும் என்பது நேர்மறை சிந்தனை தான், ஆனால் நான் பரீட்சையில் முதல் தரத்தில் சித்தி பெற்றுவிட்டேன் என எண்ணி அந்த ஆனந்தத்தை அனுபவிக்கும் போது அந்த நேர்மறை சிந்தனை பலமடங்கு வலுப்பெற்று பரீட்சையில் சித்தியடையச் செய்யும்.
இவ்வாறான நேர்மறை சிந்தனைகளால் இழந்த எதையும் திருப்பிப்பெற முடியும். ஆனால் இதனை சாத்தியப்படுத்துவது எளிமையான காரியமல்ல. இல்லாத பணத்தை இருக்கிறதாக எண்ணி மகிழ்வதென்பது இலகுவான காரியமல்ல, இல்லாத குழந்தையை மடியில் கிடத்தி தாலாட்டுவது எளிய செயலல்ல. சிலசமயங்களில் முட்டாள்தனமாகக்கூட இருக்கும், ஆனால் எண்ணினால் கிடைக்கும். சொல்வது நடக்கும். சொல்வதை சரியாக சொன்னால் மட்டுமே நடக்கும்.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என சொல்ல சொல்ல நம் வாழ்க்கை மகிழ்வாக மாறிவிடும். ஒருவர் நலம் விசாரிக்கும் போது, "ஏதோ இருக்கேன்", "நான் கவலையா இருக்கேன்", "நான் நல்லாவே இல்லை", "கடன் என்னைப் பாடாய் படுத்துது", "நீரிழிவால் அவதிப்படுகிறேன்" என்றெல்லாம் கூறியிருப்போம், கூறக் கேட்டிருப்போம். இவ்வாறான எண்ணங்கள் சொல்பவரை மட்டுமல்ல கேட்பவருக்கும் எதிர்மறை அலைகளை உருவாக்கி விடுகிறது. நாம் எவ்வாறு இருப்பினும், "நல்லா இருக்கேன்", "சந்தோஷமா வாழ்றேன்" எனக்கூறுவது இருவருக்கும் நன்மை பயக்கும். மாறாக "ஒரு குறையும் இல்லை" எனக்கூறிவிட்டாலும் அது தவறாகி விடும். குறை என்பதே எதிர்மறையாகும். ஆகவே நம் சிந்தனைப் போக்கை நாம் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும்.
"எள்ளைக்கொட்டினாலும் அள்ளிவிடலாம், சொல்லைக்கொட்டினால் அள்ள முடியாது" என்று ஒரு பழமொழியைக் கேட்டிருப்போம். அள்ளுகிறோமோ இல்லையோ, எதிர்மறை சொற்களைக் கொட்டிவிட்டால் எதிர்மறை சிந்தனை உருவாகிவிடுகிறது. அது அலைகளாக வெளியேறி தீயசக்தியை உண்டுபண்ணி நமக்கு தீமையையே கொண்டு வந்து சேர்க்கிறது. ஆகவே, எது நடந்தாலும் அதை தூக்கி ஓரமாய் நிறுத்திவிட்டு மகிழ்வாக வாழக் கற்றுக் கொள்வோமானால் நம் வாழ்வில் மேலும் மேலும் மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும்.
அழுவதாலும் சோகப்பாடல்களைக் கேட்டு இரசிப்பதாலும் நாம் துக்கமெனும் இருட்டறைக்கே இழுத்துச் செல்லப்படுகிறோம்.
அழுவதாலும் சோகப்பாடல்களைக் கேட்டு இரசிப்பதாலும் நாம் துக்கமெனும் இருட்டறைக்கே இழுத்துச் செல்லப்படுகிறோம்.
நம்மை சுற்றி உள்ள மாயவலையை எப்போது நாம் கிழித்தெறியப் போகிறோம்? "நல்லதே நடந்தது" என்று எண்ணிதான் வாழ்ந்து பார்ப்போமா? தீயதெனக் கருதினாலும் அதை எண்ணி வருந்தாது நல்லதே நடந்ததாக மகிழ்ந்துப் பார்ப்போமா? சிலநாட்களுக்கு அழாமல் வாழ எத்தனிப்போமா? பணக்காரராகி பணமலை மேல் நிற்பதாக எண்ணிக்களிப்போமா? மாடி மேல் மாடி வைத்து வீடு கட்டியதாக பெருமை கொள்வோமா? ஆரோக்கியமாக இருப்பதாக எண்ணி ஆனந்திப்போமா? கடனாளியாய் இருந்தாலும் அதை மறந்து தலை நிமிர்ந்து நடப்போமா? பிறரை நேசிப்போமா?, பிறர் மீது அன்பு செலுத்துவோமா?, நல்லதையே நினைப்போமா?, நல்லதையே செய்வோமா?, நன்றி கூறுவோமா?, மனதாற வாழ்த்துவோமா?
மாறித்தான் பார்ப்போமா?
பிரவீனா-ஹட்டன்
மாறித்தான் பார்ப்போமா?
0 Comments